அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி மறுப்பு!

Amarnath Ramakrishna
Published on: 

மலேசியாவுக்குச் செல்ல அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி மறுத்த மத்திய அரசுக்கு, இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் :

"ஒன்றிய அரசு விரும்பும் வகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை எழுத மறுத்து வரும் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா, டிசம்பர் 19, 20 ஆம் தேதிகளில் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம் அனுமதிக்கு தேவையான தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, ஏ.எஸ்.ஐ. இயக்குநர் அவருக்கு எழுதிய கடிதத்தில், "ஏ.எஸ்.ஐ. அல்லது இந்திய அரசின் செயல்பாடு, கொள்கைகள் அல்லது நற்பெயரை விமர்சிக்கும் எந்த கருத்தையும் நீங்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்.

அவரது விவாதங்களில் ஏ.எஸ்.ஐ. அல்லது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்லது கொள்கைகளுக்கு எதிராக எதுவும் இருக்கக் கூடாது. நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உறுதிமொழி கிடைத்தவுடன்வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் அனுமதிக்குத் தேவையான தடையில்லா சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும்." என்று குறிப்பிட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

அமர்நாத் ராமகிருஷ்ணா அந்த உறுதிமொழியை தர மறுத்துவிட்டதாகவும் அதனால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்திலும் அவர் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கீழடி அகழாய்வு தளத்தின் ஆரம்பக் கட்டம் தளம் கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை இருந்திருக்கலாம் என்று அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியிருந்தார். அந்த ஆரம்பக் கட்டத்திற்கு கொடுக்கப்பட்ட காலத்தை மறுத்து, அறிக்கையில் திருத்தங்கள் செய்யுமாறு கேட்டது. ஆனால் அவர் அதை செய்யவில்லை என்பதால் வெளிநாடு செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடு அறிவியல், வரலாறு தொல்லியல் அகழாய்வு ஆகியவற்றை காவிமயமாக்கும் முயற்சியாகும்.

உடனடியாக, அமர்நாத் ராமகிருஷ்ணா மலேசியா செல்ல அனுமதி வழங்கிட வேண்டும்."

மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்:

"கீழடி அகழாய்வு அறிக்கையில் மாற்றங்கள் செய்யுமாறு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஒன்றிய அரசு நிர்ப்பந்தம் அளித்து அவர் அதற்கு மறுத்ததாலேயே, அவரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

தொல்லியல் துறையின் சிறந்த ஆய்வாளராகத் திகழும் அமர்நாத் இராமகிருஷ்ணன் இத்தகைய தடைகளுக்கு ஆளாவது அவரின் அறிவியல் பூர்வமான கருத்துகளுக்கு எதிரான பழிவாங்கலே ஆகும்.

கீழடியின் தொன்மை நிறுவப்படுவது சங்பரிவாரத்தின் போலி வரலாற்று திரிபுகளுக்கு எதிரானதாக இருக்குமென்பதே உண்மை. அதனால் தான் அறிக்கையை மாற்றி எழுதுமாறு அமர்நாத் மீது நிர்ப்பந்தம் உருவாக்கப்படுகிறது. சுதந்திரமாக செயல்பட வேண்டிய இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையம், ஒன்றிய அரசின் அரசியல், சித்தாந்த தேவைகளுக்கானதாக மாற்றப்படுவதன் வெளிப்பாடே அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் தடைகளும் ஆகும்.

ஆகவே, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் மலேசியாவில் நடைபெறும் தமிழ் வரலாற்று ஆராய்ச்சி மாநாட்டில் பங்கேற்க விதிக்கப்படும் தடை முற்றிலும் ஏற்க இயலாதது. ஒன்றிய அரசு இத்தடையை விலக்கி, அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்." என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram