விஸ்வகர்மா திட்டம்- பிரதமர் தொடங்கிவைத்தார்!
பதின்மூன்று ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார்.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர நாளன்று டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, விஸ்வகர்மா திட்டத்தை அறிவித்தார். மறுநாளே இந்தத் திட்டத்துக்கு ரூ.13,000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
நேற்று விஸ்வகர்மா ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் குரு - சீடன் பாரம்பரியம், கைவினைக் கலைஞர்களின் குடும்பங்களின் முன்னேற்றத்துக்கு ஊக்கம் அளிக்கப்படும் என்றும், குடும்பம்சார்ந்த 18 பாரம்பரிய கைவினைத் தொழில்களைச் செய்பவர்கள், இத்திட்டத்தில் பயன் அடையலாம் என்றும் அவர் கூறினார்.
அந்த 18 தொழில்களின் அஞ்சல்தலைகள் அடங்கிய தொகுப்பையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
ஐந்து ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளபோதும், அடுத்த ஆண்டில் வரும் புதிய அரசாங்கம்தான் இதை தொடர்ந்து செயல்படுத்துவது பற்றி முடிவெடுக்க முடியும்.