புனே பெண் ஆபத்தான முறையில் தொங்கும் காட்சி
புனே பெண் ஆபத்தான முறையில் தொங்கும் காட்சி

இப்படி பண்றீங்களே… சாகசம் காட்டிய இளசுகள் கைது!

சோஷியல் மீடியா வைரலுக்காக உயிரைப் பணயம் வைத்து சாகச வீடியோ எடுத்த இளைஞர்களை காவல் துறை கைது செய்துள்ளது.

சோஷியல் மீடியாவில் வீடியோவுக்கு அதிக லைக்குகள் வரவேண்டும் என்பதற்காக நெட்டிசன்கள் என்னென்னமோ செய்கின்றனர். புனேயை சேர்ந்த ஒரு பெண் தனது உயிரை பணயம் வைத்து சோசியல் மீடியா வீடியோவுக்காக போஸ் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

புனேயில் உள்ள ஜம்புல்வாடி என்ற இடத்தில் இருக்கும் நாராயண் மந்திர் அருகில் பழுதடைந்த, கைவிடப்பட்ட கட்டடம் ஒன்று இருக்கிறது. அக்கட்டடத்தின் மாடிக்கு சென்ற ஒரு இளம்பெண், மாடியிலிருந்து கட்டடத்தின் பின்புறம் வழியாக கீழே இறங்க முயன்றார். அவர் மாடியில் நின்ற தனது நண்பரின் கையை பிடித்துக்கொண்டு ஸ்பைடர்மென் போன்று அந்தரத்தில் தொங்கினார். அதுவும் அப்பெண் ஒரு கையால் தான் தனது நண்பரின் கையை பிடித்திருந்தார். அப்பெண்ணின் கையை பிடித்தவர் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை இரண்டு பேர் பிடித்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்தார். 100 மீட்டர் உயரத்தில் அப்பெண் அந்தரத்தில் தொங்கினார். அவர் கீழே விழுந்தால் விபரீதம் ஏற்பட்டு இருக்கும். இந்த விபரீத விளையாட்டில் ஈடுபட்டவர்கள் எந்தவித பாதுகாப்பு வசதியும் செய்யாமல் இருந்தனர். அவர்களின் இந்த விபரீத விளையாட்டு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

இந்த விபரீத விளையாட்டு குறித்து காவல்துறைக்குத் தெரிய வந்தது. இதையடுத்து புனே பாரதி வித்யாபீட் காவல்துறை 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சாகசம் செய்த காந்தி, சலுங்கே மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு குறைவான சிறைத்தண்டனையோ, அபராதமோ விதிக்கப்படலாம் என்கிறனர். மேலும், இதில் ஈடுபட்ட மற்றொரு நபரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com