நடிகர் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ்

பா.ஜ.க.வில் பிரகாஷ்ராஜ்?- திடீர்ப் பரபரப்புக்கு அவரே அளித்த விளக்கம்!

நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க.வில் இணையப் போவதாக திடீரெனத் தகவல்கள் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின. இன்று பிற்பகல் 3 மணிக்கு அவர் பா.ஜ.க.வில் சேர்வார் என்று சமூக ஊடகங்களில் உறுதியான செய்தியைப் போல தகவல் பரவியிருந்தது.

பல ஆண்டுகளாக பா.ஜ.க. அரசின் கொள்கைகளை விமர்சித்துவரும் பிரகாஷ் ராஜ், அந்தக் கட்சியிலேயே சேர்கிறாரா என ஏராளமானவர்கள் அதிர்ச்சியுடன் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்தனர். ஒருவழியாக, பிரகாஷ் ராஜே இந்தக் குழப்படிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

இன்று பிற்பகல் 2.56 மணிக்கு பிரகாஷ் ராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில், “ அவர்கள் முயற்சிசெய்தார்கள் என்று நினைக்கிறேன். என்னைக் (கருத்தியலாக) விலைக்கு வாங்கும் அளவுக்கு தாங்கள் வலிமை படைத்தவர்கள் இல்லையென அவர்கள் உணர்ந்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், நண்பர்களே.. சும்மா கேட்கிறேன்! ” என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மையத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டு பிரகாஷ் தோற்றுப்போனார். 

இந்தத் தேர்தலில் தனக்கு மூன்று கட்சிகள் ஆதரவளிக்கத் தயாராக இருந்ததாகவும் ஆனால் தன் கொள்கைகளுக்காக அல்லாமல், மைய அரசை எதிர்த்து தான் வைக்கும் விமர்சனங்களுக்காகவே அவர்கள் தன்னை அணுகுவதாகவும் அவர்களின் வலையில் சிக்கிக்கொள்ள தனக்கு விருப்பமில்லை என்றும் பிரகாஷ்ராஜ் கடந்த ஜனவரியில் கேரள இலக்கியத் திருவிழாவில் தெரிவித்தார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com