திரௌபதி முா்மு
திரௌபதி முா்மு

இந்தியில் பெயர் சூட்டப்பட்ட குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட 3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முா்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.

ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898, இந்திய சாட்சிய சட்டம்-1872 ஆகியவற்றுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய 3 சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது புதிய குற்றவியல் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் உள்துறை விவகாரங்கள் தொடா்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அந்தக் குழு பரிந்துரைத்தது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதாக்கள் திரும்பப் பெறப்பட்டு, திருத்தங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டன.

மசோதாக்கள் மீது கடந்த வாரம் நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘பழைமை வாய்ந்த குற்றவியல் சட்டங்கள் காலனிய மனநிலையுடன் இருந்தன. தண்டனை வழங்குவதையே அவை நோக்கமாகக் கொண்டிருந்தன; நீதியை நிலைநாட்ட அல்ல. இந்தியர்களின் சூழலுக்கு ஏற்ற நீதி அமைப்பை இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் உறுதி செய்யும். காலனிய மனநிலையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்தும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மசோதாக்களுக்கு மக்களவை கடந்த டிசம்பர் 20-ஆம் தேதியும் மாநிலங்களவை கடந்த டிசம்பர் 21-ஆம் தேதியும் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு இந்த 3 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளாா்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com