
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் பீடி, சிகரெட், பான் மசாலா பொருட்களின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக ரூ.18க்கு விற்கப்படும் ஒரு சிகரெட் விலை, இனி ரூ.72க்கு விற்பனை செய்யப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலால் வரி திருத்த மசோதா விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தத் திருத்தத்தின் கீழ், சிகரெட்டுகளுக்கான நீளம் மற்றும் அதன் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போது 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.200 முதல் ரூ.735 வரை வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், புதிய சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தத் தொகை ரூ.2,700 முதல் ரூ.11,000 வரை பல மடங்கு உயா்த்தப்பட உள்ளது.
மெல்லும் புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக நான்கு மடங்காக உயா்த்தப்படும். ஹுக்கா புகையிலைக்கான வரி 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயா்த்தப்படும். அதிகபட்சமாக, புகையிலைச் சோ்மானங்களுக்கான வரி 60 சதவீதத்திலிருந்து 300 சதவீதமாக ஐந்து மடங்கு உயா்த்தப்படும். தற்போது, ரூ. 18-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ. 72 வரை உயர உள்ளது.
இந்த வரி விதிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் தரப்பில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி விதிப்பு சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கருதப்படுகிறது.