ஸ்ரீஹரி கால்னோர், அஜய் தவாரே
ஸ்ரீஹரி கால்னோர், அஜய் தவாரே

புனே கார் விபத்து: கோல்மால் செய்த 2 அரசு மருத்துவர்கள் கைது!

புனேவில் கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவன் மது குடிக்கவில்லை என்பதை நிரூபிக்க ரத்த மாதிரியை மாற்றிய இரண்டு அரசு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மராட்டிய மாநிலம் புனேவில் 17 வயது சிறுவன் ஏற்படுத்திய கார் விபத்தில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி, சிறார் நீதிமன்றம் அவனுக்குப் பிணை வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சிறுவனின் பிணை ரத்து செய்யப்பட்டது.

இதேபோல சிறுவனின் ரத்த பரிசோதனை முடிவும் அவன் மதுகுடிக்கவில்லை என வந்ததும் சந்தேகத்தை எழுப்பி இருந்தது. சிறுவனும் அவனது நண்பர்களும் விபத்து நடந்த அன்று பார் ஓட்டலில் ரூ.48 ஆயிரத்துக்கு மது குடித்த ஆதாரம் கிடைத்தபோதிலும், ரத்த மாதிரி சோதனையில் சிறுவன் மதுகுடிக்கவில்லை என வந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றி, வேறு நபரின் ரத்தத்தை சோதனை செய்து முடிவை வெளியிட்டதாக புனேயில் உள்ள சசூன் அரசு மருத்துவமனை தடயவியல் மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் அஜய் தவாரே, அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் ஸ்ரீஹரி கால்னோர் ஆகியோரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தந்தை விஷால் அகர்வால், மருத்துவர் அஜய் தவாரேயை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் சிறுவனின் ரத்த மாதிரியை மாற்றுவதற்கு வேறு பல உதவிகள் செய்வதாக மருத்துவரிடம் உறுதி அளித்து இருக்கிறார்.

சிறுவனின் தந்தை பேசியதை அடுத்து தான் மருத்துவர் அஜய் தவாரே ரத்த மாதிரியை மாற்றி உள்ளார். சிறுவனின் ரத்த மாதிரி குப்பையில் வீசப்பட்டு, வேறு நபரின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

எனினும் போலீசார் மரபணு சோதனைக்காக சிறுவனின் ரத்த மாதிரியை வேறு ஒரு மருத்துவமனை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வக பரிசோதனை முடிவும், சாசூன் ஆஸ்பத்திரி பரிசோதனை முடிவும் வேறுபட்டு இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே விசாரணையில், மருத்துவர்கள் ரத்த மாதிரி அறிக்கையை மாற்றி மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com