கணவனுக்கு மனைவி கல்லீரல் தானமளித்த பிறகு அவர்கள் இருவருமே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தன் கணவர் பாபு கோம்கருக்கு கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்தார் அவரது மனைவி காமினி.
இதைத் தொடர்ந்து, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாபு கோம்கரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், அவர் ஆகஸ்ட் 17ஆம் தேதி உயிரிழந்தார். கல்லீரல் தானம் கொடுத்த காமினிக்கு தொற்று ஏற்பட்டு அவரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலமானார்.
மருத்துவமனையின் அலட்சியம் காரணமாகவே இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டிய அவர்களின் குடும்பத்தினர், உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்த வலியுறுத்தி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று ஒப்படைக்குமாறு அந்த தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, கணவன் - மனைவி உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ நெறிமுறைகளின் படியே அறுவை சிகிச்சை நடைபெற்றது. பாபு கோம்கர் பல சிக்கல்களை கொண்ட நோயாளியாக இருந்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்தார் என விளக்கம் அளித்துள்ளது.