இராகுல் காந்திக்கு மீண்டும் அரசு வீடு
இராகுல் காந்திக்கு மீண்டும் அரசு வீடு

ராகுல் காந்திக்கு மீண்டும் அரசு வீடு- அதே வீட்டில் தங்குவாரா?

மீண்டும் எம்.பி. பதவியைப் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் இராகுல்காந்திக்கு அவருடைய பழைய அரசு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடு ஒதுக்கும் குடியிருப்பு அலுவலகம் முறைப்படி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதம் தொடர்பாக 8 நாள்களுக்குள் இராகுல் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎன்ஐ செய்தி முகமை இதைத் தெரிவித்துள்ளது.

ஆனால், 12, துக்ளக் சாலை முகவரியில் உள்ள இந்த வீட்டிலேயே மீண்டும் தங்குவதா இல்லையா என இராகுல்காந்தி முடிவெடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 தொடர்ந்து 19 ஆண்டுகள் இந்த வீட்டில் குடியிருந்துவந்த இராகுல் காந்தி, கடந்த மார்ச் 24ஆம் தேதியன்று மோடி வழக்கால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் தன் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாததால், அரசு வீட்டைக் காலிசெய்யுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவரும் துக்ளக் சாலை வீட்டை காலிசெய்து கொடுத்தார். நேற்று திங்கள் முதல் இராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் உரிமையை மீளப் பெற்றநிலையில், அவருக்கான அரசு வீட்டு உரிமையும் கிடைத்தாக வேண்டும். அதன்படி வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் எம்.பி. பதவியும் அரசு வீடும் கிடைக்கும் என நம்பிவந்த காங்கிரஸ் தரப்பு, தெற்கு தில்லியில் உள்ள கிழக்கு நிசாமுதீன் பி2 வீட்டுக்கு இடம்மாறுவார் என்று இராகுல் தங்குவார் என்றும் தெரிவித்தது. இப்போது, அங்கு முன்னாள் தில்லி முதலமைச்சர் சீலா தீட்சித் மகனும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சந்தீப் தீட்சித் வசித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடு வழங்கப்பட்டது குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேட்டபோது, “மொத்த இந்தியாவும் எனக்கு வீடுதான்” என்று மட்டும் பதிலளித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com