பெங்களூர் திடீர் மழைக்கு 10 பேர் பலி!

பெங்களூர் மழை
பெங்களூர் மழை
Published on

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று பெய்த திடீர் மழையில் 10 பேர் உயிரிழந்தனர். 

ஆலங்கட்டி மழையும் கனமழையும் பலத்த காற்றுடன் சேர்ந்துகொண்டு மரங்களை வேரோடு சாய்த்தது. பல முக்கிய சாலைகளை வெள்ள நீர் மூழ்கடித்தது.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த திடீர் கனமழையால், மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நசுங்கின. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

கனமழையின் போது பௌரிங் லேடி கர்சன் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், ஆறு வயது சிறுமி உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

அவர்களில் இருவர், கல்விச் சுற்றுலாவாக அங்கு சென்றிருந்த கேரள மாநிலத்து மாணவர்கள் ஆவர். மழை காரணமாக, இடிந்து விழுந்த சுவரின் அருகே அவர்கள் ஒதுங்கியிருந்தனர்.

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பல கார்களும் இருசக்கர வாகனங்களும் விழுந்த மரங்களின் அடியில் சிக்கி நசுங்கிப்போயின.

முக்கிய சந்திப்புகளிலும் கீழ்ப்பாலங்களிலும் தண்ணீர் தேங்கியிருந்ததுடன், கே.ஆர். சர்க்கிள் கீழ்ப்பாலம் முழுவதுமாக நீரில் மூழ்கியது. மேலும், வடிகால் வசதி இல்லாத காரணத்தால் காவல்துறையினர் அப்பகுதியைத் தடுப்பு கொண்டு அடைத்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com