ரேப்பிடோ அட்டகாசம்... 100 ஆண்டுகளுக்கு வாகனத்தை முடக்கியது!

Rapido suspended the driver for 100 years
ஓட்டுநர் உரிமம் இடைநீக்கம்
Published on: 

பயணிகளிடம் எதிர்த்து வாக்குவாதம் செய்ததால், ரேப்பிடோ நிறுவனம் தனது ஓட்டுநர் கணக்கை 99 ஆண்டுகள், 11 மாதங்கள் முடக்கியதாக பட்டியலின ஓட்டுநர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அங்கித் குமார். வாகன சவாரிச் செயலியான ரேப்பிடோ ஓட்டுநரான இவர், அண்மையில் அம்மாநிலத்தில் உள்ள உத்ரத்தியா இரயில் நிலையத்திலிருந்து, சார்பாக் இரயில் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது, இந்த சம்பவம் நடந்ததாகக் கூறியுள்ளார்.

“என்னுடைய வாகனத்தில் பயணித்த பயணிகள், ஆரம்பத்தில் ஒரு மூத்த ரயில்வே அதிகாரியைப் பற்றி விமர்சித்து வந்தனர். அப்போது நான் எதுவும் குறுக்கிடவில்லை. ஆனால், சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த மூத்த ரயில்வே அதிகாரியின் திறமைகளைச் சாதியுடன் தொடர்புபடுத்திப் பேசினர்.

தங்களின் கருத்துகளைத் திரும்பப் பெறுமாறு பல முறை நான் அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். ஒருவரின் திறமைக்கும், சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர்களிடம் கூறினேன். அதைத் தொடர்ந்து, டெலிபாக் சந்தை அருகே வாகனத்தை நிறுத்தி, நான்கு பயணிகளையும் இறங்குமாறு கேட்டுக்கொண்டேன்.

இதுகுறித்து, அவர்கள் செயலி நிறுவனத்திடம் புகார் அளித்தனர். இதனால், ரேப்பிடோ நிர்வாகம் எனது ஓட்டுநர் உரிமத்தை 99 ஆண்டுகள், 11 மாதங்கள் இடைநீக்கம் செய்ததாகத் தெரிவித்துள்ளது.

என் தரப்பு நியாயத்தை ஒரு முறையாவது கேட்டிருக்க வேண்டும். என்னவென்று கேட்காமலே அவர்கள் என்னை இடைநீக்கம் செய்துவிட்டார்கள். நான் மட்டுமே என்னுடைய குடும்பத்தில் வருமானம் ஈட்டுகிறேன். இந்தச் செயலால், தற்போது என்னுடைய குடும்ப வருமானம் பாதித்துள்ளது.” என்று அங்கித் குமார் கூறினார்.    

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com