ஊர் உலகத்தில் இருக்கிற பெருங்கோடீசுவரர்கள் எல்லாம் அவர்களுக்குப் பிடித்த எதையாவது வித்தியாசமாகச் செய்வது இயல்புதான். இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாட்டாவோ, மும்பையில் விலங்காபிமானமாக ஒரு வேலையைச் செய்திருக்கிறார்.
மும்பை, மகாலட்சுமி வட்டாரத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய விலங்கு மருத்துவமனை ஒன்றை அமைத்திருக்கிறார்.
86 வயதான அவருக்கு வீட்டு விலங்குகள் மீது அவ்வளவு விருப்பம். அவர் தொழிலதிபர் என்பதால், அந்த அன்பை சிறிய மருத்துவமனையாகக் கட்டி வெளிப்படுத்தியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.
சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பைக் கொண்ட அந்த மருத்துவமனையில், 200 படுக்கைகள் உள்ளன.
பிரிட்டனின் புகழ்பெற்ற கால்நடை மருத்துவரான தாமஸ் ஹீத்கோட் தலைமையிலான மருத்துவர் குழு இதில் பணியாற்றவுள்ளது.
இதில் என்னென்ன வசதிகள் இருக்கும்?
தோல் சிகிச்சை, இதயவியல், ரேடியாலஜி உட்பட்ட சிகிச்சைப் பிரிவுகளும், எம்.ஆர்.ஐ., சிடிஸ்கேன், யு.எஸ்.ஜி. சோதனை வசதிகளும் கிடைக்கும்.
வருங்காலத்தில் அறுவைச்சிகிச்சை வசதியும் ஏற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தெருவில் திரியும் விலங்குகளுக்கு குறைந்த செலவிலோ இலவசமாகவோ சிகிச்சை அளிக்கப்படுமாம்.
இந்த மருத்துவமனையுடன் இணைந்தபடி அருகிலேயே தெருநாய்களுக்கான தொண்டு அமைப்பான வெல்பர் ஆப் ஸ்ட்ரே டாக்ஸ் அமைப்பால் நடத்தப்படும் தடுப்பூசி மையமும் உண்டு!
நாய்கள் உட்பட்ட செல்லப் பிராணிகளுக்காக ஆங்காங்கே கிளினிக்குகள் இருந்தாலும், பெரிய மருத்துவமனை போன்ற அமைப்பு வேண்டும் எனும் எதிர்பார்ப்பை இந்தியாவின் பாரம்பரிய தொழில் அதிபர் நிறைவேற்றிவைத்துள்ளார்!