ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி என தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பாஜக, காங்கிரஸ், திரிணமுல், திமுக உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். இவர் ஜன் சுராஜ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
பிகாரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தின்போது தேர்தல் வியூக வல்லூநராக தனது சம்பளத்தை பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தினார்.
பிகார் மாநிலம் பெலகஞ்சில் நடந்த ஒரு நிகழ்வில், அவர் பேசியதாவது:
தேர்தலுக்கு ஒருவருக்கு நான் ஆலோசனை கூறினால் எனக்கு கிடைக்கும் சம்பளம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஒரு தேர்தலில் நான் ஒருவருக்கு அறிவுரை கூறினால், எனது கட்டணம் ரூ. 100 கோடி. இதுபோன்ற ஒரே ஒரு தேர்தலுக்கு நான் ஆலோசனை கூறினால் எனது பிரசாரத்திற்கு செலவு செய்ய முடியும்.” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.
தன் சம்பளத்தைப்பற்றி பிரசாந்த் கிஷோர் வெளிப்படையாக பேசியிருப்பது, கடந்த காலங்களில் அவரை வியூக ஆலோசகராக பணியில் அமர்த்திய பாஜக, திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.