புதுடெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லியை நோக்கி விவசாயிகள் போராட்டம்

டெல்லி- போராடும் விவசாயிகள் மீது தாக்குதல், நடப்பது என்ன?

தலைநகர் டெல்லியை நோக்கிச் செல்லும் விவசாயிகள் மீது, காவல்துறை இரண்டாம் நாளாக இன்றும் தாக்குதல் நடத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்துசெய்வது உட்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டுவர வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளுடன் கடந்த 2021ஆம் ஆண்டு போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர்.

அதைத் தொடர்ந்து, மீண்டும் நேற்று பிப்ரவரி 13 அன்று போராட்டமென விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்தது. இதையொட்டி, விவசாயிகள் அமைப்பினருடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஸ் கோயல் ஆகியோர் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

திட்டமிட்டபடி, டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் அறிவித்தன. இதைத் தடுக்க டெல்லி, அரியானா அரசுகள் 144 தடை உத்தரவு பிறப்பித்தன.

மேலும், டெல்லியின் எல்லைகளில் காங்கிரீட் தடுப்புகள், இரும்பு வேலிகள், முள் வேலிகள் ஆகியவை அமைக்கப்பட்டன. சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டன.

அவற்றையெல்லாம் மீறி, விவசாயிகள் பஞ்சாப் மாநிலம் பதேகார்சாகிப்பிலிருந்து சாம்பு எல்லை வழியாக டெல்லிக்குச் செல்ல திட்டமிட்டனர். அதன்படி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்களில் புறப்பட்டனர்.

விவசாயிகள் சாம்பு எல்லையை நெருங்கியவுடன், காவல் துறைக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த அரியானா போலீசார், விவசாயிகளை நோக்கி கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர். இருப்பினும் பல விவசாயிகள் முன்னேறி வந்தனர். அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இரண்டாவது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடங்கி உள்ளது. டெல்லி எல்லைகளில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த முறை விவசாயிகள் குடில்கள் அமைத்து முகாமிட்டுப் போராடிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகள் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. எல்லைகளில் மட்டுமின்றி, மத்திய டெல்லியின் முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தால், நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடாளுமன்றம் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன.

டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகள் மீது நேற்று முதல் நாள் போராட்டத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்படும் டிரோன்கள் மூலம் கண்ணீர்ப் புகைகுண்டுகள் வீசப்பட்டன.

மேலும் ரப்பர் குண்டுகள் மூலம் விவசாயிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

மேலும், அரியானா மாநிலத்தில் அம்பாலா, குருசேஷ்த்ரா, கைதால், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், சிர்சா ஆகிய மாவட்டங்களில் தொலைபேசி சேவைகள் தவிர, இணைய சேவைகள், எஸ்.எம்.எஸ். மற்றும் அனைத்து தொலைதொடர்பு சேவைகளும் நாளை வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com