தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்தை அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
தன்பாலின ஈர்ப்பாளர் இணையர்களின் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கமுடியாது என உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள் தொடர்பாக அண்மைக் காலமாக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சிலஆண்டுகளுக்கு முன்னர் தன்பாலின ஈர்ப்பாளர் சேர்ந்துவாழ்வது குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்தது. ஆனாலும் இதற்கு சட்ட அங்கீகாரம் உண்டா இல்லையா என்பது கேள்வியாக நீடித்தது.
இதுகுறித்து தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அதில் இன்று நான்கு வகையான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்தனர். நிறைவாக, மூன்றுக்கு இரண்டு என்கிறபடி தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்தை சட்டரீதியாக அங்கீகரிக்க முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
நாடாளுமன்றம்தான் இதைப்பற்றி சட்டம் இயற்றமுடியும் என்றும் அதற்காக நாடாளுமன்றத்தை நீதிமன்றம் வற்புறுத்த முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை அவர்களின் வீட்டுக்குச் செல்லும்படி வற்புறுத்துவது, துன்புறுத்துவது போன்றவற்றை காவல்துறையினர் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.