வலி யாருக்குப் புரியும்…? பாதிக்கப்பட்டவர்களுக்குத்தானே…? 14 வயதில் நடுத்தர வயதுடைய ஆணுடன் திருமணம், 16-இல் விவாகரத்து, இதற்கிடையே ஒரு கைக்குழந்தை. சிறிய வயதிலேயே சொல்லொண்ணா துயரங்களை எதிர்கொண்டிருக்கும் ரோஷ்னி பர்வீன் பற்றிய கதைதான் இந்தச் செய்தி.
23 வயதாகும் ரோஷ்னி பர்வீன், பீகாரின் பாட்னா அருகே உள்ள கிஷன்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். தான் எதிர்கொண்ட கஷ்டத்தை வேறு எந்தப் பெண்ணும் எதிர்கொள்ளக் கூடாது என்பதற்காக, குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதில் இறங்கினார். அதில் மும்முரமாக செயல்பட்டுவருபவர், குறிப்பாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார். கிஷன்கஞ்ச் பகுதியில் 2024ஆம் ஆண்டிற்குள் குழந்தைத் திருமணத்துக்கு முடிவுகட்டுவேன் என சபதம்போலச் சொல்கிறார்.
கடந்த ஏழு வருடங்களில் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் இவர் ஐம்பது குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தியுள்ளார். குழந்தைத் திருமணத்துக்கு எதிராக, தான் வசிக்கும் பகுதியில் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவரது பிரச்சாரம் கிஷன்கஞ்ச் மட்டுமில்லாது சுற்றுவட்டார ஊர்களான கதிஹார், பூர்னியா, ககாரியா போன்ற பகுதிகளிலும் செய்துகொண்டுள்ளார்.
”குழந்தைத் திருமணத்தின் வலியை உணர்ந்தவள் என்பதால், மற்ற பெண்களும் அதனால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வாழ்க்கையையே அர்ப்பணித்து, குழந்தைத் திருமணத்துக்கு எதிரான பிரச்சாரத்தைச் செய்துவருகிறேன். பாட்னாவில் குழந்தைகள் பாதுகாப்பு மையங்கள் இருந்தாலும், அவற்றின் செயல்பாடுகள் முழுமையானதாக இல்லை.” என்கிறார் ரோஷ்னி பர்வீனா.
அவரின் குழந்தைக்கு இப்போது எட்டு வயது ஆகிறது.
பிகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், கடந்த 2017 - காந்தி ஜெயந்தி அன்று குழந்தை திருமணத்திற்கு எதிராக, மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை தொடங்கினாலும், இன்னும் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்படவில்லை என்கின்றனர் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.
“நாளை நான் முதலமைச்சரைச் சந்திக்க விரும்புகிறேன். எனது கதையையும் கதியையும் மற்ற இளம் பெண்கள் எதிர்கொண்ட கொடூரமான கதைகளையும் சொல்ல விரும்புகிறேன். அவர் எனக்கு நேரம் கொடுப்பார் என்று நம்புகிறேன்.” என உறுதியோடு பேசுகிறார் ரோஷ்னி பர்வீனா
ரோஷ்னி பர்வீனாவின் மன உறுதியும் அர்ப்பணிப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது.