தில்லி பிபிசி அலுவலக சோதனையின்போது
தில்லி பிபிசி அலுவலக சோதனையின்போதுகோப்புப் படம்

ரெய்டு, விசாரணை... இந்தியாவில் தனியார் நிறுவனத்தின் கைக்கு மாறிய பிபிசி!

வரி மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்ட பிபிசி இந்தியா நிறுவனத்தை விட்டுவிட்டு, புதிதாக இந்தியர்கள் தொடங்கியுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் செய்தி வெளியிடும் உரிமையை பிரிட்டன் அரசாங்க நிறுவனம் கைமாற்றியுள்ளது. 

அதாவது, பிபிசி இந்தியா என்கிற பெயரில் பிரிட்டன் அரசாங்கத்தின் பொது நிறுவனத்தின் கிளையாக இயங்கிவந்த நிறுவனமே, பிபிசி செய்திகளை வெளியிட்டு வந்தது. அதன் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையாக பிபிசி நிறுவனமே பொறுப்பாக இருந்துவந்தது. இங்கு பணியாற்றும் ஏழு மொழிகளின் பிரிவுகளைச் சேர்ந்த 200+ ஊழியர்களும் பிபிசிஊழியர்களாக இருந்துவந்தனர். 

இந்நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இந்திய பிபிசி நிறுவனத்தின் தில்லி, மும்பை உட்பட்ட அலுவலகங்களில் வரி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடுதல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சோதனை நடைபெற்று ஓராண்டு கடந்துள்ள நிலையில், பிபிசி இந்தியா புதிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 

அதன்படி, பிபிசி செய்திகளை இனி ’கலெக்டிவ் நியூஸ்ரூம்’ என்கிற புதிய இந்திய தனியார் நிறுவனம் வெளியிடும். அதாவது செய்தி வெளியீட்டு உரிமையை இந்திய நிறுவனமே கையாளும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்த தனியார் நிறுவனம் வேறொரு நிறுவனம்தான் என்றாலும், பிபிசி தரப்புக்குத் தொடர்பே இல்லாத நிறுவனம் என்றும் சொல்லிவிட முடியாது. பிபிசி இந்தியாவின் முக்கிய அதிகாரிகளாகப் பதவி வகித்தவர்களே இந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தில், 2021 நேரடி அந்நிய முதலீட்டுச் சட்டப்படி, 26 சதவீதம் அளவுக்கு தங்களின் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்குமாறு பிரிட்டன் அரசாங்க நிறுவனமான பிபிசி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.  

முன்னதாக, அதானி குழுமம் தொடர்பான இண்டென்பர்க் அறிக்கையை முன்வைத்து பிபிசி சிறப்புச் செய்திகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com