சாம்பவி சவுத்ரி, பீகார் லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.
சாம்பவி சவுத்ரி, பீகார் லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.

26 வயது புது பெண் எம்.பி. எதிர்கொண்ட அனுபவம்!

கடந்த 2016இல் வாய்பிளக்க கட்டடங்களை வியந்து பார்த்தபடி தில்லிக்குள் காலடி எடுத்துவைத்த அந்த 18 வயதுப் பெண், இன்று நாடாளுமன்ற வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார்.

இந்தப் பெருமைக்கு உரியவரும் தெற்கு தில்லி லேடி சிறீராம் கல்லூரியில் சமூகவியல் மாணவியுமான சாம்பவிக்கு, இன்னும் பூரிப்பு அடங்கவில்லை. பதினெட்டாவது மக்களவையின் இளம் உறுப்பினர்களில் இவரும் ஒருவர்!

“ஐந்நூறு முறையாவது கண்ணாடிமுன்பு நின்று ஒத்திகை பார்த்திருக்காவிட்டால் மக்களவையில் நடுங்காமல் பேசியிருக்கமுடியாது.” என்கிறார் அதே பூரிப்போடு.

பீகாரின் சமஸ்டிப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சாம்பவி சவுத்ரி, வெற்றிபெற்றதும் அதி முக்கியமான தொகுதி. பாரத ரத்னா விருது பெற்ற கர்ப்பூரி தாக்கூர், மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான் குடும்பத்தினர் மட்டுமே கோலோச்சிவந்த தொகுதியில், முதல் முறையாக குறிப்பாக ஒரு பெண் வென்றிருக்கிறார், சாம்பவி என்பது முக்கியமானது.

பத்தாயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டுதோறும் குறைந்த சம்பளம் தரும் வேலைகூடக் கிடைக்காமல், அவதிப்பட்டு வரும் நிலையில், மிக இளம் வயதில் ஒருவரை எம்.பி.யாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், சாம்பவி அரசியலுக்கு முற்றிலும் புதியவர் அல்ல. இவரின் தந்தை அசோக் சவுத்ரி, மாநில அமைச்சர். நிதிஷ்குமாருக்கு ரொம்பவும் நெருக்கமானவரும்கூட. சாம்பவியின் தாத்தா மகாவீர் சவுத்ரி மூத்த காங்கிரஸ் தலைவர். பிறந்தவீட்டில் இப்படி என்றால், புகுந்த வீட்டில் சாம்பவியின் மாமனார் கிசோர்குணால் ஓர் ஐ.பி.எஸ். அதிகாரி; அயோத்தி பிரச்னையில் சமரசக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

சாம்பவி சவுத்ரி, பீகார் லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.
சாம்பவி சவுத்ரி, பீகார் லோக் ஜனசக்தி கட்சி எம்.பி.

என்னதான் இருந்தாலும் வாக்குகள் தாமாக வந்து விழுந்துவிடுமா?

இளநிலைப் பட்டத்தை முடித்த சாம்பவி, தில்லி பொருளாதாரப் பள்ளியில் முதுநிலைப் பட்டத்தை முடித்தார். சில ஆண்டுகளுக்கு பீகாரின் பாட்னாவில் பள்ளி ஒன்றில் இயக்குநராக இருந்தார். இவரும் இவர் கணவர் சாயான் குணாலும் கொரோனா காலத்தில் லோக் ஜனதா கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வானுடன் நெருக்கம் ஆகியிருக்கிறார்கள். அந்த நேரம் பார்த்து சிராக்குக்கு அவர் குடும்ப அரசியல் பிரச்னை உச்சத்தில்!

பாஸ்வானின் சகோதரர் பசுபதி பராஸ் கட்சியை உடைத்து, சின்னத்தையும் பெற்று மத்திய அமைச்சராகவும் ஆகிவிட்டார். ராம்விலாஸ் பாஸ்வானுக்கு யார் அரசியல் வாரிசு என்கிற பஞ்சாயத்து...!

சிராக்குடன் இருந்தவர்கள் 15-20 தலைவர்கள் மட்டுமே!

”அப்போதும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. அதுதான் அவரிடம் எனக்கு பிடித்துப்போனது. 2019ஆம் ஆண்டில் தில்லிக்கு வந்தபிறகு அடிக்கடி சிராக்கைச் சந்திப்பேன். ஆனால் 2021இலிருந்துதான் முக்கியமான விசயங்களைப் பேசத் தொடங்கினோம். அவருடைய உறுதியைப் பார்த்துதான் கட்சிக்கான வாக்குகள் போகாது என்பது தெரிந்தது.” என்கிறார் சாம்பவி.

சிராக் பாஸ்வான்
சிராக் பாஸ்வான்

பா.ஜ.க. கூட்டணியில் சிராக்குக்கு 5 இடங்கள் தரப்பட்டதில், முதல் வெற்றியைப் பெற்றார். ஆனால் அவருடைய சித்தப்பா பராசுக்கோ ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

சமஸ்டிப்பூர் தொகுதியிலும் சிராக்குக்கு சிக்கல் இருந்தது. பாஸ்வானின் இன்னொரு உறவினரான பிரின்ஸ் ராஜ் என்பவர்தான், ராம்விலாஸ் பாஸ்வான் கட்சி மட்டுமின்றி, மாநிலத்தின் முக்கிய தலித் தொகுதி என்கிற உணர்ச்சிமயமான பின்னலுக்குள் தொகுதியைத் தொடர்ந்து வைத்திருந்தார். பாஸ்வான்களின் தொகுதியைக் கைப்பற்றும் அளவுக்கு பலமில்லாத மகாதலித் எனும் பிரிவுக்குள் வருவது, பாசி சமூகம். அந்த சமூகத்தைச் சேர்ந்த சாம்பவிக்கு இந்த வெற்றி அசாதாரணமானது. ஏனென்றால், இதுவரை இந்த சமூகத்தினர் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுவது நினைத்துப்பார்க்கவே முடியாததாக இருந்தது.

சமஸ்டிப்பூர் தொகுதியில் 70% பேர் கிராமங்களில் வசிக்கின்றனர். அவர்களின் தனி நபர் வருமானம் தேசிய சராசரியை ஒப்பிட ஆறில் ஒரு பங்கு என்கிறபடிதான் இருக்கிறது. ஊர்களுக்குப் பிரச்சாரத்துக்குப் போன சாம்பவி சில விசயங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துபோனார். பொது இடங்களில் பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருப்பதையும் குறிப்பாக பெண்கள் தனியாக வாக்கு சேகரிக்கச் செல்லமுடியாமல் இருப்பதையும் பார்த்து துணுக்குற்றார்.

”முதல் சில நாள்கள் இவள் என்ன சின்னவள், அதுவும் பெண்தானே என நினைத்தார்கள். பலரும் என்னை விட்டுவிட்டு என் கணவரிடம் பேசுவதிலேயே இருந்தனர். அவர்களையெல்லாம் நானே என்ன என்பதை என்னிடம் பேசுமாறு பேசவைத்தேன். நான்தான் உங்களுக்குப் பொறுப்பு என்று சொன்னேன். சனங்களுக்கு அப்பாவும் கணவனும்தான் அதிகாரமுள்ளவர்கள் என நினைக்கிறார்கள்.” என்றவர், சமூகம் சரியானதை உணர்ந்துகொள்ள கொஞ்ச காலம் எடுக்கத்தான் செய்யும் என்று சமாதானமாகவும் சொல்லிக்கொள்கிறார்.

பிரச்சாரத்தில் இறங்கியவருக்கு இரண்டு பெரும் பிரச்னைகள் உருவெடுத்தன. ஆனாலும் அவற்றையே சாதகமாகவும் மாற்றிக்கொண்டார், சாம்பவி. லோக் ஜனசக்தி கட்சியின் பழைய பங்களா சின்னத்தை கிராமப்புற மக்களால் அவ்வளவு எளிதில் மறக்கமுடியவில்லை. புதிய ஹெலிகாப்டர் சின்னத்தை அந்த மக்களிடம் கொண்டுசெல்வது சவாலாக இருந்தது.

”என்னுடைய பெயரையும் சின்னத்தையும் சேர்த்து கிராமப்புறத்து சிறுவர்களுக்கு லூடோ விளையாட்டை அறிமுகம்செய்தோம். வீதி நாடகங்கள், சிறுசிறு கருத்தரங்குகள், மோடியையும் ராம்விலாஸ் பாஸ்வானையும் ஹெலிகாப்டர் மூலம் சேர்த்து புது சின்னத்தைப் பரப்பினோம்.” என நடந்த கதையைச் சொல்கிறார்.

மேலும், ஒரு பெண்ணாக இருப்பது ஆண் வேட்பாளர்களைவிட இவரை கிராமப்புறங்களில் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது.

“எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது கிராமத்துப் பெண்களுக்கு தெரிந்திருக்கிறது. அவர்கள் மனம்திறந்து பேசினார்கள். ஆண் வேட்பாளர்கள் வந்து கிராமத்தின் முக்கிய ஆண்களுடன் பேசிவிட்டுச் சென்றுவிடுவார்கள். நானோ வயது மூத்த அம்மாக்கள், சகோதரிகளுடன் அவர்களின் வீட்டுக்குள் போய்ப் பேசினேன். ஒரு நாள் பிரச்சாரத்தின்போது நடு வீதியில் ரொம்ப வயதான பாட்டி ஒருவர் என் முகத்தைத் தொட்டு, அப்படியே பிடித்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினார். அவரிடமிருந்து விடுபட நெடு நேரம் ஆகிவிட்டது. அந்த ஊருக்குள் அதுவரை ஒரு முறைகூட வேட்பாளரே போனதில்லையாம்!” என விவரிக்கிறார், வியப்பு நீங்காமல்!

logo
Andhimazhai
www.andhimazhai.com