
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய விவகாரத்தில் வழக்கறிஞர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு அடுத்த தலைமை நீதிபதியான சூர்யகந்த், நீதிபதி ஜாய்மாலா பக்சி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்ற அமர்வில், கோஷம் எழுப்பியது, காலணி வீசியது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்புதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிதான், இந்த வழக்கைத் தொடர வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு, இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புவது, தலைமை நீதிபதி மீது காலணியை வீசிய வழக்குரைஞருக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை அளிக்கவே உதவும். மேலும் அந்த சம்பவத்தின் ஆயுளை அதிகரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இந்த சம்பவம் இயற்கையான மரணத்தை அடைய அனுமதிக்க வேண்டும் என்றனர்.
அப்போது பார்க்கவுன்சில் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி ‘காலணி வீசியவர், தான் செய்த செயலை நியாயப்படுத்தி பேசி வருகிறார். மீண்டும் அதுபோன்ற செயலை செய்வதாக கூறியுள்ளார். தலைமை நீதிபதி தனிப்பட்ட முறையில் மன்னிப்பு வழங்கி இருக்கலாம். சமூக ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காலணி வீசிய ராகேஷ் கிஷோரை மன்னித்து விடுவிக்க தலைமை நீதிபதியே கூறிவிட்டார். எனவே மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறோம். அதே நேரத்தில் உரிய வழிகாட்டி நெறி முறைகளை வகுத்து வெளியிடலாம் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.