தலைமை நீதிபதி மீது ஷூ வீச்சு… ’சனாதன தர்மத்தை இழிவு படுத்தினால்…’ முழக்கம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது ஷூவை வீசி இருக்கிறார் வழக்கறிஞர் உடையில் இருந்த ஒருவர். திங்கள்(06-10-2025) அன்று நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வு வழக்கறிஞர்களின் ‘ மென்ஷன்களை’ விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது குறிப்பிட்ட ஒரு வழக்கறிஞர் நீதிபதி அமர்ந்த மேடையை நெருங்கி, ஷூவைக் கழற்றி எறிய முயன்றார். நீதிமன்றப் பாதுகாவலர்கள் உடனே அவரைப் பிடித்து, தாக்குதலைத் தடுத்து வெளியேற்றினார்கள்.
அவரைப் பிடித்து வெளியே கொண்டு செல்லும்போது, ‘ சனாதன தர்மத்தை இழிவு படுத்துவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்’ என இந்தியில் கோஷம் எழுப்பினார்.
தலைமை நீதிபதி கவாய் இதுபற்றி சலனம் ஏதும் அடையவில்லை. நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களை அமைதியாக இருக்கும்படியும் தங்கள் வாதங்களைத் தொடரும்படியும் கேட்டுக்கொண்டார்.
’இது எதுவும் என்னைப் பாதிக்காது’ என்று அவர் கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கஜுரஹோவில் உள்ள கோவிலில் விஷ்ணு சிலை ஒன்று இடிந்த நிலையில் உள்ளது என்றும் அதை சரிசெய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கடந்தமாதம் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டது. இதைத் தலைமை நீதிபதி அமர்வு, இது தொல்லியல் துறையின் கீழ் வரக்கூடியது. அதுதான் முடிவெடுக்கவேண்டும் என தள்ளுபடி செய்தது. அத்துடன், ‘ இது பப்ளிசிட்டிக்காக போடப்பட்ட வழக்கு. நீங்களே போய் விஷ்ணுபகவானிடமே இதுபற்றிப் முறையிட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தீவிரமான விஷ்ணு பக்தராக இருந்தால் இதில் தலையிடுமாறு அவரிடமே வேண்டிக்கொள்ளலாம்’ என்று கவாய் சொன்னார்.
இந்த கருத்தின் பின்னணியில் தான் அவர் மீது காலணி வீசும் முயற்சி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.