மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி கிடப்பில் போட்டாலும் நீதிமன்றம் தலையிடக்கூடாதா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பாக நேற்று நடைபெற்றது.
அப்போது மராட்டிய அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “முதலில் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநர் மறுப்பதற்கான சூழலை யாரும் வரையறுக்க முடியாது. அது, ஆளுநர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது.
மேலும், இத்தகைய விவகாரங்களில் நீதித்துறை மறு ஆய்வு செய்வது என்பது, மறைமுகமானதாக தான் இருக்க வேண்டுமே தவிர நேரடியாக தலையிட முடியாது. மேலும், மத்திய அரசின் வரம்புக்குள் தான், மாநில அரசு மசோதாவை உருவாக்குகிறது என்றால், அரசியலமைப்பு பிரிவு 201ஐ பயன்படுத்தி, அதை ஆளுநர், குடியரசுத் தலைவர் நிராகரிக்க அதிகாரம் இருக்கிறது.” என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி, “மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி போட முடியுமா? இது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி கேட்கக்கூடாதா?” என்று கேட்டார்.
இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஒடிசா, கோவா, புதுச்சேரி, அரியானா மாநிலங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் காலகெடு விதிக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
இன்றும், ஆட்சேபிக்கும் தரப்பு வாதங்களை உச்சநீதிமன்றம் கேட்க உள்ளது.