சிக்கிமில் நிலச்சரிவால் சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிக்கிம் மாநிலம் நம்சி மாவட்டத்தில் உள்ள சமர்துங் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம், இந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக சுரங்கப்பாதையின் நுழைவாயில் இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சுரங்கத்திற்குள் பணிபுரிந்து கொண்டிருந்த 25-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தேசிய, மாநில மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர், போலீசார் தீவிரமாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுரங்கப்பாதையின் நுழைவாயில் மூடப்பட்டதாலும், நச்சு வாயுக்கள் வெளியேறுவதாலும் மீட்பு பணியிலண சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நச்சு வாயுக் கசிவினால் மீட்புப் படையினர் மயக்கம் அடைகின்றனர். இருப்பினும், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த விபத்தில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சிக்கிம் அரசு ரூ. 4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் அறிவித்துள்ளார்.