
ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் இன்று(மார்ச் 8) முறைப்படி ஜேடியு-வில் இணைந்து உறுப்பினர் அட்டையைப் பெற்றுக் கொண்டார்.
பீகார் முதல்வராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும் நிதீஷ் குமார், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு கடந்த மாா்ச் 5-இல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதன்மூலம் தனது முதலமைச்சர் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள அவர், விரைவில் பதவி விலக உள்ளார். நிதீஷ் விலகலுக்குப் பின் பாஜக முதல்வர் தலைமையில் பீகாரில் புதிய அரசு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிஷாந்தின் அரசியல் பிரவேசம், ஜேடியு தலைமையின் தலைமுறை மாற்றத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. ஆனால், நிதீஷ் குமாரின் முடிவால் அதிருப்தியில் இருந்த அவரது கட்சியினருக்கு நிஷாந்தின் அரசியல் பிரவேசம் ஆறுதல் அளித்துள்ளது.
ஜேடியுவில் இணைந்த பிறகு கட்சித் தொண்டர்களிடம் பேசிய நிஷாந்த், தன் மீது நம்பிக்கை வைத்ததற்காக தலைமைக்கும் ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
நிஷாந்த் குமார் பற்றி...
நிதீஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமாா் (50) பி.டெக். பட்டதாரி. மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றியுள்ள அவர், அரசியலில் இருந்து விலகியே இருந்தார்.
கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றார். பீகாா் அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றுவதில் முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு பின்னணியில் இருந்து அவர் உதவியதாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில், அவர் நேரடியாக தீவிர அரசியலில் களமிறங்கியுள்ளார்.