சோனியா காந்தி
சோனியா காந்தி

நாடாளுமன்றத்தில் இந்த 9 விஷயங்களை விவாதிக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம்

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடர்பான நிகழ்ச்சி நிரல் குறித்து பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறும் என்று கடந்த வாரம் திடீரென அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் திடீர்க் கூட்டத்துக்கான காரணங்கள் பற்றி அரசுத் தரப்பில் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவுக்கு பாரத் என பெயர் மாற்றம், பொது சிவில் சட்டம், பெண்களுக்கான இட ஒதுக்கீடு போன்றவை விவாதிக்கப்பட வாய்ப்பு உண்டு என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, சிறப்புக் கூட்டத்தொடர் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

அதில், “பிற அரசியல் கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் இந்த சிறப்பு அமர்வு கூட்டப்பட்டிருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதன் நிகழ்ச்சி நிரல் பற்றி ////////////எங்களில் யாருக்கும் தெரியாது. விவாதத்துக்கு உரிய விதிகளின் கீழ், குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறி, ஒன்பது பிரச்னைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

அதன் விவரம்:

1. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஏற்றத்தாழ்வுகள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பேரழிவு ஆகியவை.

2. விவசாயிகள், விவசாய அமைப்புகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, அவர்கள் எழுப்பிய பிற கோரிக்கைகள் தொடர்பாக அரசு உறுதியளித்தல்.

3. அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு கோரிக்கை.

4. மணிப்பூர் மக்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் இன்னல்கள், மாநிலத்தில் சமூக நல்லிணக்கம், அரசியலமைப்பு முடக்கப்பட்டமை.

5. ஹரியானா போன்ற பல்வேறு மாநிலங்களில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு.

6. இந்தியப் பகுதியில் சீனாவின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு, லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் நம் எல்லைகளில் நமது இறையாண்மைக்கு எதிரான சவால்கள்.

7. சாதிவாரி கணக்கெடுப்பின் அவசரத் தேவை.

8. மத்திய-மாநில அரசு உறவுகளில் ஏற்படும் பாதிப்புகள்.

9. சில மாநிலங்களில் கடுமையான வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி காரணமாக ஏற்படும் இயற்கை பேரழிவுகளின் தாக்கம்.

”இந்த பிரச்னைகள் வரவிருக்கும் சிறப்பு அமர்வில் எடுத்துக் கொள்ளப்படும் என்று நான் ஆவலுடன் நம்புகிறேன்" என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com