லடாக்கில் உள்ள பாஜக அலுவலகத்துக்குப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அங்குப் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், அரசியலமைப்பின் 6வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்தப் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் அக்டோபர் 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 10ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்ட நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை முதல் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதேநேரத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
போலீஸாரின் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமின்றி லே நகரில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கற்களை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.