
மனித உயிருக்கு ஏற்படும் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த வெறிநோய், குணப்படுத்த முடியாத நோய் அல்லது நிரூபிக்கப்பட்ட அபாயகரமான தெருநாய்களுக்கு கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் முதன்முறையாக அனுமதி அளித்துள்ளது.
இந்த உத்தரவைப் பிறப்பித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிகரித்துவரும் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கு பல வழிகாட்டுதல்களையும் பிறப்பித்தது.
தெருநாய்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவை எட்டியுள்ள பகுதிகளிலும், அடிக்கடி நிகழும் நாய்க்கடிகள் அல்லது ஆக்ரோஷமான தாக்குதல்கள் பொதுப் பாதுகாப்பிற்குத் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக இருக்கும் இடங்களிலும், மாநகராட்சி அதிகாரிகள் கருணைக்கொலை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தேசியத் தலைநகரில் தெருநாய் கடிப்பதால், குறிப்பாக குழந்தைகளிடையே வெறிநாய்க்கடி நோய் ஏற்படுவது குறித்த செய்திகள் மூலமாக, கடந்த ஆண்டு ஜூலை 28 அன்று சுயவழக்காகப் பதிவுசெய்து உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இன்றைய விசாரணையில், தெருநாய்களை இடமாற்றம் செய்வது, கருத்தடை செய்வது தொடர்பான தனது முந்தைய உத்தரவைத் திரும்பப் பெறக் கோரிய மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்பது, நாய்க்கடி தாக்குதல்களால் ஏற்படும் தீங்கு, அச்சுறுத்தலின்றி சுதந்திரமாக நடமாடும் உரிமையையும் உள்ளடக்கியது என்றும் நீதிபதிகள் அழுத்தமாகக் குறிப்பிட்டனர்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும், தேவையான உள்கட்டமைப்பு, பயிற்சிபெற்ற பணியாளர்கள், அறுவைசிகிச்சை வசதிகள், துணைக்கருவிகளுடன் முறையாகச் செயல்படக்கூடிய ஒரு முழுமையான ஏபிசி மையம் நிறுவப்படுவதை உறுதி செய்ய வேண்டும்," எனக் கூறிய நீதிமன்றம்,
"குழந்தைகள், வெளிநாட்டுப் பயணிகள், முதியோர் நாய்க்கடிக்குப் பலியான மோசமான கள யதார்த்தங்களை நீதிமன்றம் புறக்கணிக்க முடியாது." என்றும் குறிப்பிட்டது.