
தில்லி கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன், கரப்பான் கட்சியினர் இன்று போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கரப்பான் ஜனதா கட்சியின் நிர்வாகிகளை நீதிமன்றக் காவலில் வைத்துள்ள உத்தரவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று தில்லி கன்னாட் பிளேஸில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்த கரப்பான் கட்சியினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கன்னாட் பிளேஸ் பகுதியைச் சேர்ந்த வியாபாரி ஒருவர், பண்டிகைக்காலங்களில் போராட்டம் நடத்துவதால் வணிகர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால் கரப்பான் கட்சியின் போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
தில்லி உயர்நீதிமன்றம், கரப்பான் கட்சியினரின் போராட்டத்திற்குத் தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்து உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, அந்த வியாபாரி உச்ச நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைதியான முறையில் கரப்பான் கட்சியினர் போராட்டம் நடத்தத் தடை விதிக்க முடியாது என்று கூறினர்.
மேலும், வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அசாதாரண சூழல் ஏதும் ஏற்பட்டால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.