
பா.ம.க.வின் சின்னம் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் இரண்டு நாள்களுக்குள் வழக்குதொடுக்கலாம் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஓராண்டாக நீடித்துவரும் இந்த விவகாரத்தில், பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் அன்புமணியின் தரப்புக்கே மாம்பழம் சின்னம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இராமதாசு தரப்பு மேல்முறையீடு செய்தது.
சின்னம் பிரச்னைக்கு உரியதாகிவிட்டால் எந்தத் தரப்புக்கும் ஒதுக்கக்கூடாது எனக் குறிப்பிட்டு தலைமை நீதிபதி, சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதா எனக் கேட்டார்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது என அன்புமணி தரப்பு தெரிவித்தது. ஆனால் அங்கீகாரம் இல்லாத கட்சியின் விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கக் கூடாது என இராமதாசு தரப்பு வாதிட்டது.
இதில், தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் விளையாடுவதாக நீதிமன்றம் விமர்சனம் செய்தது.
நிறைவாக, உத்தரவிட்ட நீதிமன்றம், சிவில்(சென்னை) நீதிமன்றத்தில் இரண்டு நாள்களுக்குள் இதுகுறித்து வழக்கைத் தாக்கல்செய்யவும் அடுத்த மூன்று நாள்களுக்குள் வழக்கை விசாரித்து முடிக்கவும் வேண்டும் என்று கூறிவிட்டது.
இது, இராமதாசு தரப்புக்குச் சாதகமாகக் கருதப்படுகிறது.