காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செல்லும் என தீர்ப்பு
காஷ்மீர் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செல்லும் என தீர்ப்பு

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து- 3 தீர்ப்புகள்!

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச்சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சுதந்திரம் அடைந்த இந்தியாவுடன் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த தனி சமஸ்தானங்கள் படிப்படியாக இணைக்கப்பட்டன. தனி நாடாக இருந்த காஷ்மீரை பிரதமராக நேரு இருந்தபோது காஷ்மீர், இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. அப்போது, சில சிறப்பு உரிமைகள் வழங்கி அரசமைப்புச்சட்டத்தின் 370ஆவது பிரிவு உருவாக்கப்பட்டது. 

அதன்படி, காஷ்மீரி அல்லாத எவரும் அங்கு சொத்து வாங்கமுடியாது; ஜம்மு காஷ்மீருக்கென தனி கொடி, தனி பிரதமர் இருப்பார்; மைய அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் ஒப்புதல் அளித்தால்தான் அது நடைமுறைக்கு வரும் என பல தனியுரிமைகள் ஏற்கப்பட்டன. ஆனால் காலப்போக்கில் பல அம்சங்கள் நீக்கப்பட்டு, இந்தியாவின் சிறப்பு அந்தஸ்து பெற்ற ஒரு மாநிலம் என்கிற அளவில் ஜம்மு காஷ்மீர் மாற்றப்பட்டது. 

பெரும்பாலும் இசுலாமியர்களைக் கொண்ட அந்த மாநிலம் தனித்தன்மையுடன் இருந்துவந்த நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட்டில் மைய அரசு 370ஆவது பிரிவை அதிரடியாக நீக்கியது. அத்துடன் காஷ்மீர் சட்டப்பேரவையையும் முடக்கிவைத்தது. 

அதை எதிர்த்து பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. அவற்றை விசாரித்து இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தலைமைநீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வில், சந்திரசூட், கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பையும் நீதிபதி எஸ்.கே.கவுல் ஒரு தீர்ப்பையும் வழங்கியுள்ளனர்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா இரு கருத்துகளையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com