
தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடத்தை 3 மாதத்திற்குள் தேர்வு செய்ய வேண்டும் என்று மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவோதயா பள்ளிகளில் இந்தி உட்பட்ட மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதால், தமிழக அரசு இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி, தமிழக அரசின் கட்டாய தமிழ்க் கற்றல் முறையை நவோதயா பள்ளிகள் மீறாது என்றும், மாவட்டவாரியாக 240 மாணவர்கள் பயிலும்வகையில் தற்காலிக இடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாவட்டந்தோறும் நவோதயா பள்ளிகள் தொடங்குவதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கண்டறிய வேண்டும் என்று கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
நேற்று விசாரணைக்கு வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்தினா, "தமிழக மாணவர்கள் நவோதயா பள்ளிகளை பெறும் உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? நவோதயா பள்ளிகளுக்கு மத்திய அரசு முழுமையாக நிதி ஒதுக்கும்போது, இதுபோன்ற பள்ளிகளை மாநிலத்தில் தொடங்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? இந்தித் திணிப்பு என்ற தமிழக அரசின் மனநிலை மாற வேண்டும். நவோதயா பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது என்பதற்காக தமிழக மண்ணில் வேண்டாம் என்ற மனப்பான்மை உள்ளது. கிராமப்புற மாணவர்களுக்கு அரசுப் பள்ளி வசதியில்லாதபோது நவோதயா பள்ளிகள் பயன்படும். நவோதயா பள்ளிகளில் கற்பிக்கப்படும் மொழி தொடர்பாக மத்திய அரசுடன் கலந்தாலோசித்து முடிவெடுங்கள்." என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா கூறியதாவது, "நாட்டிலேயே கல்விக்கு அதிகமாக பட்ஜெட் ஒதுக்கும் மாநிலம் தமிழகம். போதுமான பள்ளி வசதிகள் இல்லாமல் தமிழகம் இல்லை. இத்தகைய பள்ளிகளை தொடங்குவதா அல்லது வேண்டாமா என்று மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மாநில அரசு குறிப்பிட்ட கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று யாரும் வற்புறுத்தக்கூடாது.
மும்மொழிக்கொள்கையை பின்பற்றும் நவோதயா பள்ளிகள் தமிழக அரசின் இருமொழி கொள்கைக்கு முரணாக உள்ளது. எனவே, இவை தமிழகத்திற்கு பொருந்தாது. மத்திய அரசு கல்வித்துறையில் தமிழகத்திற்கு ஒதுக்குவதாக ஏற்றுக்கொண்ட ரூ.5000 கோடியை இன்னும் தரவில்லை." என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஓர் அடி முன்னெடுத்து வைத்து, மத்திய அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் நிறுவதற்கான இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.