வேலைக்கு போங்க...இல்லனா அவ்வளவுதான்... மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அறிவுரை!
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், போராடி வரும் மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 14ஆவது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த மருத்துவமனைகளில் பிறநோயாளிகள் மற்றும் அவசரமில்லா சிகிச்சை பிரிவுகள் முடங்கி, நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்கும் வரை, தங்கள் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் அறிவித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், பணிக்குத் திரும்ப அறிவுறுத்தியிருக்கிறது.
மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பாவிடில், அவர்கள் விடுப்பு எடுத்ததாகத்தான் கருதப்படுவார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்குச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
மருத்துவர்களுக்கு வருகைப் பதிவு அளிக்க வேண்டும் என எங்களால் உத்தரவிட முடியாது என்றும், மருத்துவர்களின் போராட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுவதை கவனிக்காமல் இருக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
மனிதாபிமானமற்ற முறையில், மருத்துவர்கள் தொடர்ச்சியாக 36 மணி நேரத்துக்கும் மேலாக வேலை வாங்கப்படுகிறளார்கள். மருத்துவர்களின் பணி நேரத்தை ஒழுங்குபடுத்துவது குறித்து பணிக்குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.