சமீபத்தில் மராட்டிய முதல்வர் பட்னாவிஸ் முன்னிலையில் 60 மாவோயிஸ்டுகள் சரணடைந்தனர். அதில் 70 வயதான பூபதி என்பவரும் ஒருவர். இவர் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் நான்கு பொலிட்பீரோ உறுப்பினர்களின் ஒருவர். இதைத் தொடர்ந்து மராட்டிய மாநிலத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் முடிவுறும் நிலை வந்துவிட்டதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். முன்னாள் மாவோயிஸ்ட் சகா ஒருவரின் உணர்ச்சிகரமான கடிதமும் பூபதி சரண்டையக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
பூபதியின் தலைக்கு ஆறுகோடி ரூபாய் காவல்துறை அறிவித்திருந்தது. அவர் மிக முக்கியமான மாவோயிச போராளியாகக் கருதப்பட்டார். 2011 இல் சத்தீஸ்கரில் தண்டேவாடா தாக்குதலில் 76 சிஆர்பிஎப் போலீசார் கொல்லப்பட்ட தாக்குதலின் மூளையாக இவர் தான் சித்திரிக்கப்பட்டிருந்தார். இந்திய அளவில் சிபிஐ(மாவோயிஸ்ட்) அமைப்புக்கு நான்கு பொலிட்பிரோ உறுப்பினர்கள்தான் உண்டு. இதில் பூபதியும் ஒருவர். மீதி மூவரில் ஒருவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. இருவர்தான் இயங்கிவருகிறார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏன் பூபதி சரணடைந்தார்?
இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. 2011-இல் காவல்துறை மோதலில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவரான கிஷன் ஜி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் இவரது அண்ணன் ஆவார். கடந்த ஜனவரி மாதம் பூபதியின் மனைவி தாரகா, மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் பத்து சகாக்களுடன் சரண்டைந்தார். இவர் சுமார் 35 மாவோயிஸ்ட் தாக்குதல்களில் கலந்துகொண்ட போராளி என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. அதுமட்டுமல்ல பூபதியின் அண்ணியும் கிஷன் ஜியின் மனைவியுமான சுஜாதா என்ற முக்கியமான மாவோயிஸ்ட் போராளியும் தெலுங்கானா மாநிலத்தில் போலிசாரிடம் சரணடைந்தார். இவர் சிபிஐ மாவோயிஸ்ட் கட்சியில் மத்தியக்குழு உறுப்பினர்.
மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் பதவிக்கு பூபதி தேர்வாக வேண்டி இருந்த நிலையில் தேவுஜி என்ற ஒருவர் தேர்வு செய்யப்பட்டார். இதில் சற்று மனக்கசப்புடன் இருந்த நிலையில் மாவோயிச நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவு குறைந்துவருவதை ஒட்டியும் இந்த சரணடையும் முடிவுக்கு அவர் வந்திருக்கக்கூடும் என சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சரணடைந்த அனில் என்ற முன்னாள் மாவோயிஸ்ட் பூபதிக்கு ஆயுதங்களைக் கைவிடுமாறு எழுதிய உருக்கமான கடிதமும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.
அக்கடிதத்தின் சுருக்கம்: “ எந்த ஒரு நாட்டிலும் சோசலிசப் புரட்சி வெற்றிகரமாக நடக்கவில்லை. கட்சியும் நீங்களும் ஆயுதத்தைக் கைவிட்டு மையநீரோட்டத்தில் இணையவேண்டும். ஆதிவாசிகள், தலித்துகள், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமைகள் அம்பேத்கரின் அரசியல் சாசனம் மூலமே பெற முடியும். நமது நகர்ப்புற ஆதரவாளர்கள் சுயநலமிகளாகவே உள்ளனர். உங்களைப் போன்ற அறிவுஜீவிகள், மக்களுடன் இருந்து இயங்கவேண்டும். தற்போதைய சூழலில் மாவோயிச இயக்கம் அமைதியான சூழலில் தன்னை மறுபரிசீலனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. 1972-க்குப் பிறகு நடந்த அனைத்து பின்னடைவுகளிலும் பெரிய பின்னடைவில் நாம் இப்போது உள்ளோம்.’’
சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களை விட மகாராஷ்டிராவில் போராளிகள் மறுவாழ்வுக்கு சாதகமான நிலை இருப்பதாகக் கருதி இங்கு சரணடைந்துள்ளார் பூபதி.
கடந்த செவ்வாய் அன்று மாலை சத்திஸ்கர் எல்லையில் ஓரிடத்தில் சரணடைந்த மாவோயிடுகள் மகாராஷ்டிட்ரா மாநில கட்சிரோலி காவல் தலைமை நிலையத்துக்கு பேருந்துகள் மூலம் கொண்டுவரப்பட்டனர். மறுநாள் காலையில் முதலமைச்சர் பட்னாவிஸிடம் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அனைவருக்கும் முதலமைச்சர் இந்திய அரசியலமைப்புச் சட்ட நூலை வழங்கினார்.
கடந்த ஆண்டு ஒரு முக்கிய மாவோயிஸ்டும் 111 போராளிகளும் சரணடைந்தனர். இந்நிலையில் பூபதி ஆயுதங்களை ஒப்படைத்துள்ளார். இவரை அடுத்து மேலும் பல மாவோயிஸ்ட் ஆயுதப் போராளிகள் சரணடைய முன்வருவதாகக் கூறப்படுகிறது.