பாலியல் வழக்கு: நாடு திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா கைது!
பாலியல் வழக்கில் வெளிநாட்டிற்குத் தப்பிச்சென்ற பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைப்போல 2 ஆயிரத்து 900 ஆபாச வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்துவந்த நிலையில் அவர் ஜெர்மனிக்குத் தப்பிச்சென்றார்.
பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிறப்பு நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவரைக் கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியிலிருந்து கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தார். அவரை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்தனர்.
ஒருவழியாக பிரஜ்வல் ரேவண்ணாவின் 34 நாள்கள் தலைமறைவு ஆட்டம் முடிவுக்கு வந்தது.