எழுத்தாளர் அம்பை
எழுத்தாளர் அம்பை

டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எழுத்தாளர் அம்பை!

எழுத்தாளர் அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

1944இல் கோவையில் பிறந்த அம்பையின் இயற்பெயர் சி.எஸ்.லட்சுமி. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பெண்கள் வரலாறு, வாழ்க்கை பற்றிய ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் வற்றும் ஏரியின் மீன்கள், ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு, அந்தேரி, மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார்.

புதுமைப்பித்தன் விருது, டொராண்டோ பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் இலக்கிய விருது, கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி, சாகித்ய அகாதெமி உட்பட பல்வேறு விருதுகளை இதுவரை பெற்றுள்ளார்.

ஸ்பாரோ என்னும் பெண்கள் ஆவணக் காப்பகத்தை மும்பையில் 1988-இல் நிறுவி அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தமிழின் மூத்த எழுத்தாளர் அம்பைக்கு 2023 ஆம் ஆண்டிற்கான டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அனிதா தேசாய், மார்க் டுல்லி, அமிதவ் கோஷ், ரஸ்கின் பாண்ட் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோர் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com