கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பதவியேற்பு
கரூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி பதவியேற்பு

உதயநிதி வாழ்க, எ.வ. வேலு வாழ்க... நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்கள்!

பதினெட்டாவது மக்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.

பெரும்பாலானவர்கள் உளமார உறுதி எடுத்துக்கொண்டனர்.

கடலூர் தொகுதி உறுப்பினர் விஷ்ணுபிரசாத், சிவகங்கை கார்த்தி சிதம்பரம், இராமநாதபுரம் நவாஸ்கனி, நெல்லை ராபர்ட் புரூஸ், குமரி விஜய் வசந்த், கிருஷ்ணகிரி கோபிநாத், மயிலாடுதுறை சுதா (தமிழ்க் கடவுள் முருகப்பெருமான்) ஆகியோர் கடவுளை முன்னிறுத்தி பிரமாணம் செய்வதாகக் குறிப்பிட்டனர்.

கிருஷ்ணகிரி எம்.பி. கோபிநாத் மட்டும் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார். கடைசியாக, நன்றி வணக்கம் மட்டும் தமிழில் சொன்னார். 

வழக்கத்துக்கு மாறாக, தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதியை வாழ்த்தியும் போற்றியும் பலரும் பதவியேற்றனர். 

மைய சென்னை தயாநிதி, காஞ்சிபுரம் செல்வம், அரக்கோணம் ஜெகத்ரட்சகன், வேலூர் கதிர் ஆனத், சேலம் டி.எம். செல்வகணபதி, ஈரோடு பிரகாஷ், கோவை ராஜ்குமார் (தொண்டர்களுக்கு நன்றி என்றும் சேர்த்துச் சொன்னார்), பொள்ளாச்சி ஈஸ்வரசாமி, தஞ்சை முரசொலி ஆகியோர் உதயநிதியைக் குறிப்பிட்டு வாழ்த்தினார்கள்.   

இவர்களுடன் சேர்த்து வாழ்த்திய திருவண்ணாமலை சி.என். அண்ணாதுரை, ஆரணி தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி மலையரசன் ஆகியோர் கூடவே அமைச்சர் எ.வ.வேலுவுக்கும் வாழ்க போட்டனர்.  

இதைப் போலவே, தென்காசி இராணி ஸ்ரீகுமாரும் உதயநிதியுடன் சேர்த்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வாழ்க என்று குறிப்பிட்டார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com