பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
அமெரிக்கா இந்தியா பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளி துறை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த சூழலில் ஜவுளி ஏற்றுமதியாளர்ளின் நலன் கருதி, மேலும் மூன்று மாதங்களுக்கு பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பருத்தி இறக்குமதிக்கு டிசம்பர் 31 வரை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்றுமதியாளர்களை ஆதரிப்பதற்காக இறக்குமதி வரி விலக்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு பலனை அளிக்கும். உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி விலக்கு உள்நாட்டு சந்தையில் பருத்தி கிடைப்பதை அதிகரிக்கும். பருத்தி விலையை உறுதிப்படுத்தும். இதன் மூலம் ஜவுளிப் பொருட்கள் மீதான பணவீக்க அழுத்தத்தைக் குறைக்கும்.
இது உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி போட்டித்தன்மையை ஆதரிக்கும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.