திரைப்படங்களின் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு டெலிகிராம் செயலி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திரைப்படங்கள், இணையத் தொடர்கள், பிற பதிப்புரிமை பெற்ற ஓ.ஓ.டி. உள்ளடக்கங்கள் சட்டவிரோதமாகப் பகிரப்படுவதைத் தடுக்க, டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு 15 நாள்கள் கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் - ஒளிபரப்புத் துறை வெளியிட்டுள்ள இந்த நோட்டீஸில், சட்டவிரோத திரைப்படப் பகிர்வுக்குப் பயன்படுத்தப்படும் சேனல்கள், குழுக்கள், பாட்கள், பயனர் கணக்குகள், நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்தவும், மீண்டும் மீண்டும் விதிமீறலில் ஈடுபடும் கணக்குகளை முடக்கவும் டெலிகிராம் நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 15 நாள்களுக்குள் சமர்ப்பிக்க டெலிகிராமுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஓ.டி.டி. தளங்கள், பதிப்புரிமை உரிமையாளர்கள் முதலியோரிடமிருந்து தொடர்ந்து புகார்கள் வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.