
இந்திய கலாச்சாரத்தைச் சிறப்பாக வெளிக்கொண்டுவரவும், மிகக் குறைந்த செலவில் காணொலி தயாரிக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வீடியோ மாடல் ஏஐதான் 'வர்யா'.
பொதுவாக நாம் பயன்படுத்திவரும் ஏஐ தயாரிப்புகள் எந்த நாட்டைப் பற்றிக் கேட்டாலும் ஓரளவிற்கு ஒரே மாதிரியான உணவு, உடை, கலாச்சாரங்களை பதிலாகக் கொடுக்கும்.
இதற்கு ஒரு மாற்றாக, இந்தியாவின் தனித்துவமான கலாச்சாரம், உணவு, உடை, பண்டிகைகள் ஆகியவற்றை பற்றிய தகவல்களை ஏஐயில் கொண்டுவர செய்த முயற்சியே இந்த வீடியோ மாடல் ஏஐ 'வர்யா'.
பீக் எக்ஸ்வி நிறுவனத்தின் ஆதரவுடனும், இந்திய செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அவதார், இந்த வீடியோ மாடல் ஏஐயைத் தயாரித்துள்ளது.
'வர்யா' மற்ற ஏஐ மாடல்களைவிட 10 மடங்கு வேகமாக வீடியோக்களை உருவாக்குகிறது. இதில் உருவாக்கப்படும் வீடியோவிற்கு, வினாடிக்கு 48 பைசா மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது மற்ற ஏஐ தயாரிப்புகளைவிட மிகக் குறைந்த கட்டணமே ஆகும்.
"இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வாய்ப்பு, மிகப்பெரிய மாடல்களால் மட்டும் வரையறுக்கப்படாது. அது மிகவும் செயல்திறன் மிக்க மாடல்களாலும் வரையறுக்கப்படும்," என்று அவதார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஸ்ரவந்த் அலுரு இதன் அறிமுக விழாவில் கூறினார்.
இந்தப் புதிய ஏஐ மாடல் இந்தியாவின் பன்முகத் தன்மையை உலகளவில் எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.