நீண்ட காலமாக மழை பெய்யாமல் இருந்ததால் ஏற்பட்ட வறட்சியே சிந்து சமவெளி அழிவதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 4,500 ஆண்டுகள் பழமையான சிந்துசமவெளி நாகரீகம் ஹரப்பா, மொஹஞ்சதாரோ போன்ற முக்கிய நகர்ப்புறங்களையும் தோலாவிரா, லோதல், ராகிகர்ஹி போன்ற வாழிடங்களையும் கொண்டவை.
உலகின் மிகப்பழமையான இந்த நாகரீகம் எப்படி அழிந்தது என்பது தொடர்பாக பல்வேறு ஆய்வு முடிவுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் புதிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
அது என்னவென்றால், சிந்துசமவெளி நாகரீகம் வீழ்ச்சி அடைவதற்கு காரணம் நீண்ட காலம் நீடித்த வறட்சி என்கிறது.
தென்னிந்தியாவில் உள்ள குப்தேஸ்வர், கடப்பா குகைகள் போன்ற பழங்கால குகை உருவாக்கங்களை (speleothems) ஆய்வு செய்ததில், குறைந்த சூரிய கதிர்வீச்சு, எல் நினோ, குறைவழுத்த தாழ்வு மண்டலத்தின் தெற்கு நோக்கிய இடப்பெயர்ச்சி மற்றும் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட எதிர்மறை பருவநிலை மாறுதல் (Indian Ocean Dipole - IOD) ஆகியவை ஒன்றிணைந்து, பருவமழையை வலுவிழக்கச் செய்தன என கண்டறியப்பட்டது. இந்த காரணிகளே சிந்துசமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன என்கிறது குவாட்டர்னரி சர்வதேச இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு கட்டுரை.
இந்த ஆய்வு வெளிப்படுத்தும் ஆச்சரியமே என்னவென்றால், காலநிலை மாற்றத்தால் பருவமழை பொய்த்துபோவது என்பது நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதுதான்! தற்போது கூட காலநிலை மாற்றத்தால் பருவமழையில் மாறுதல்கள் ஏற்படுவதாகச் சொல்லப்படுவதையும் கருத்தில் கொள்ளவேண்டும்! இன்றைக்குச் சொல்லப்படும் காரணங்கள் அன்றே நிகழ்ந்து ஒரு பெரும் கலாச்சாரமே காணாமல் போயிருக்கிறது என்பது அதிர்ச்சியாகத்தான் உள்ளது!