Supreme Court
உச்சநீதிமன்றம்

வேதனை அளிக்கிறது… மருத்துவர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

Published on

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு மருத்துவர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ராஅமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் எப்.ஐ.ஆர். தாமதமாக பதிவு செய்யப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும், மருத்துவர்கள் பல்வேறு வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க மற்றொரு வன்கொடுமை சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உயிரிழந்த பெண்ணின் பெயர், புகைப்படங்கள், வீடியோ அதிகளவில் பரவி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதுதான் உயிரிழந்த பெண்ணுக்குக் கொடுக்கும் மரியாதையா என அம்மாநில காவல் துறைக்கும் மாநில அரசுக்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

மேலும் பயிற்சி பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணை நிலையை விரிவான அறிக்கையை ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் சி.பி.ஐ. தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மருத்துவர்களின் பிரச்சினை. பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com