அடேய்.. அவரு யாரு தெரியுமா? அமிதாப்பச்சனிடம் அத்துமீறி பேசிய சிறுவன்...

அமிதாப்பிடம் அத்துமீறிய சிறுவன் - கேபிசி
அமிதாப்பிடம் அத்துமீறிய சிறுவன் - கேபிசி
Published on

கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்ட சிறுவன் ஒருவன் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான அமிதாப்பச்சனிடம் அத்துமீறி பேசியதற்காக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி 'கோன்பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி. நாட்டுநடப்பு மற்றும் அறிவுசார்ந்து கேள்விகள் எழுப்பப்படும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. தங்கள் அறிவுத்திறமையை நிரூபித்து இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் லட்சாதிபதியாகவும் கோடீஸ்வரராகவும் மாறியிருக்கிறார்கள். தமிழில் கூட இந்த நிகழ்ச்சி 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்' என்ற பெயரில் ஒளிபரப்பானது நினைவிருக்கலாம்.

இந்த நிகழ்ச்சியைப் போலவே அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் பல சமயம் இணையத்தில் டிரெண்டாவார்கள். அந்த வகையில், குஜராத்தை சேர்ந்த பத்து வயதான இஷித் பட் என்ற சிறுவன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறான். அதீத நம்பிக்கையுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் இஷித்திடம், நிகழ்ச்சி தொடங்கும்போது வழக்கம்போல அமிதாப் அவனிடம் போட்டி விதிமுறைகளை விளக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், இஷித் அமிதாப்பிடம் "போட்டி விதிமுறைகள் பற்றி எனக்கு தெரியும். நீங்கள் விளக்க வேண்டாம். கேள்விகளை மட்டும் கேட்டால் போதும்" என்ற ரீதியில் பேசியிருக்கிறான். வயதில் மூத்தவரான அமிதாப்பிடம் இப்படியா மரியாதை இல்லாமல் முகத்தில் அடித்தாற் போல பேசுவது என இணையவாசிகள் ஆட்சேபிக்கின்றனர்.

அதேபோல, கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திக்கொண்டு பதில் லாக் செய்திருக்கிறான் சிறுவன் இஷித். இதையும் 'Over Confidence' என விமர்சிக்கின்றனர் இணையவாசிகள். மேலும், 'குழந்தைகளுக்கு பொறுமை, அடக்கம், சபை நாகரீகம் போன்ற விஷயங்களை வளரும்போதே கற்றுக் கொடுக்க வேண்டும். பெரியவர்களை மதிக்காவிட்டால் வாழ்விலும் வெற்றி பெற முடியாது' எனவும் அந்த சிறுவனின் பெற்றோரையும் விமர்சிக்கின்றனர் இணையவாசிகள். முதல் மூன்று கேள்விகளுக்கு சரியாக பதில்கள் கொடுத்த சிறுவன் ராமாயணம் தொடர்பான கேள்விக்கு தவறான பதில் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து பணம் எதுவும் இல்லாமல் வெளியேறி இருக்கிறான்.

விமர்சனத்திற்குள்ளான சிறுவனின் அணுகுமுறை குறித்தும், பெற்றோர் வளர்ப்பு குறித்தும் குழந்தைகள் நல சைக்காலஜிஸ்ட் டாக்டர் சுஷ்மா கோபாலன் பகிர்ந்து கொண்டதாவது:,

 "சில குழந்தைகள் இயல்பாகவே தைரியமானவர்கள், நன்றாக பேசுவார்கள். சில குழந்தைகளுக்கு மேடை மீதான பயம் இருக்கும். இந்த குணாதிசயங்களை பெற்றோர் எப்படி கையாண்டு முறைப்படுத்துகிறார்கள் என்பதில்தான் குழந்தை வளர்ப்பு இருக்கிறது.

இப்போதுள்ள சமூகத்தில், குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து மட்டும் கற்றுக் கொள்வதில்லை. பள்ளி, சமூகம், மீடியா என பரந்து விரிந்திருக்கிறது. அதனால், சமூகத்தில் குழந்தைகள் மீதான முழு கட்டுப்பாடும் தற்போது பெற்றோர்களால் எடுத்துக் கொள்ள முடிவதில்லை என்பதுதான் உண்மை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகள் அதீத உற்சாகத்துடன் அப்படி நடந்து கொள்கிறார்கள். அதனால், இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள்" என்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com