குறுஞ்செய்தி மோசடிகள்: செப். 1 முதல் ஓ.டி.பி. பெற தாமதமாகலாம்! - டிராய் அதிரடி
குறுஞ்செய்தி மூலம் நடக்கும் மோசடிகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புது விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நவீன டிஜிட்டல் உலகில் ஒவ்வொரு நாளும் புதுப்புது வகைகளில் மோசடிகள் நடந்து வருகிறது. மக்களின் செல்போனுக்கு வரும் கடவுச்சொற்களை பெற்று, அவர்களின் வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளை அடிப்பது, ஏதாவதொரு லிங்கை அனுப்பி அதன் மூலம் அவர்களது தகவல்களை திருடி பணத்தை எடுப்பது, அவர்களின் செல்போன் எண்களை செயலிழக்கச் செய்துவிடுவோம் என எச்சரிப்பது போன்ற பல மோசடிகள் நாள்தோறும் நடந்து வருகிறது. இது குறித்து பயனாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மோசடிகள் நின்றபாடில்லை.
இந்த நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, எந்தவொரு வங்கிகள், செயலிகள் சார்ந்த சேவைகள் போன்ற நிறுவனங்கள் கடவுச்சொற்களை (ஓடிபி) அல்லது அங்கீகாரமான குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு முன்னர், அதன் தலைப்பு மற்றும் தகவல்கள் மற்றும் தங்களது எண்களையும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
புதிய விதிகளின்படி, சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு குறுஞ்செய்திகளை ஸ்கேன் செய்யவும், அதனை அணுகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிகாரம் உண்டு. இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படாத தகவல்கள் தடை செய்யப்படும். அது வங்கிகள் அனுப்பும் கடவுச்சொற்களாக இருந்தாலும் விதிமுறைகளுக்கு உள்பட்டே இருக்க வேண்டும். இதனால், பயனாளர்களுக்கு கடவுச்சொற்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
வங்கிகள் இந்த விதிமுறைகளுக்கு உடன்படவில்லை என்றால், பணப்பரிவர்த்தனை குறித்த தகவல்களை பெறுவதில் பயனாளர்களுக்கு தாமதம் ஏற்படும். வங்கிகள் மற்றும் செயலி அடிப்படையில் சேவை வழங்குபவர்கள் எந்த எண்ணில் இருந்து கடவுச்சொற்கள் அனுப்பப்படும் என்பதை ஆகஸ்ட் 31-க்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய விதிகள் வரும் செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.