ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பிரதமர் ஜோக் அடிக்கிறார்; ராகுல் காட்டம்!

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதத்தின்போது, பிரதமர் மோடி ஜோக் அடிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு பதிலளித்துப்பேசிய பிரதமர் மோடி, ”மணிப்பூர் மக்களுக்கு நான் ஒரு உறுதியளிக்க விரும்புகிறேன். இந்த நாடு உங்களுடன் நிற்கிறது. இந்த நாடாளுமன்றமும் கூட. இந்த வன்முறையிலிருந்து மணிப்பூர் மீட்கப்பட்டு வளர்ச்சி, முன்னேற்றப் பாதையில் பயணிக்கும். மீண்டும் மணிப்பூர் அமைதியை காணும்” என பேசியிருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, "நாடாளுமன்ற மக்களவையில் நேற்று பிரதமர் மோடி 2.14 நேரம் உரையாற்றினார். அதில் மணிப்பூர் விவகாரம் குறித்து வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளார். மணிப்பூர் பல மாதங்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். பாலியல் வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி ஜோக் அடித்துக் கொண்டிருக்கிறார்.” என ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், “இந்திய ராணுவம் இரண்டு நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்திருக்கும். ஆனால் பிரதமர் மணிப்பூரை எரிக்க விரும்புகிறாரே தவிர எரிவதை அணைக்கவிரும்பவில்லை. பிரதமர் இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு பதிலாக தன்னைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அவருடைய எதிர்கால லட்சியங்கள் பற்றியும் அரசியல் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார். என்னுடைய பிரச்னை அவர் 2024இல் பிரதமர் ஆவது பற்றி அல்ல; மணிப்பூர் பற்றியது. இப்போதாவது பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லலாம். அங்குள்ள மக்களுடன் பேசலாம், ‘நான் உங்கள் பிரதமர்’ என்று சொல்லலாம். அவர்களிடம் அவர் பேசலாம். பிரதமரால் வன்முறையை கட்டுப்படுத்த முடியும். அதை அவர் செய்யவில்லை. வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுதான் முதல் படி. பிரதமர் அதைச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருக்கிறார்.” என்றார் ராகுல்.

”பாரத மாதா மணிப்பூரில் கொல்லப்பட்டுள்ளார். வரலாற்றில் முதன்முறையாக 'பாரத மாதா' என்ற வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பாரத மாதா என்ன பாஜகவுக்கு மட்டும் சொந்தமா? இந்தியா எனும் கோட்பாட்டையே பாஜக கொன்றொழித்து விட்டது. மணிப்பூர் படுகொலை பாரத மாதா படுகொலைக்கு சமம்." என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com