மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மாநில அரசின் வேலை உறுதி திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

Published on

மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை சூட்டியுள்ளார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்தது. கிராமப்புற மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நோக்கிலான இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் பெயரை, வளர்ச்சியடைந்த இந்தியா - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் என பெயர் மாற்றி, பல்வேறு மாற்றங்களோடு மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது மத்திய பாஜக அரசு.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அம்மாநில அரசின் வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான கர்மஸ்ரீ-க்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படும் என கடந்த டிச.18ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி நேற்று பெயரை மாற்றியுள்ளார்.

நேற்று கொல்கத்தாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய மம்தா பானர்ஜி, “நானும் இந்த நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், மகாத்மா காந்தியின் பெயரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திலிருந்து நீக்கியிருப்பதை அவமானமாகக் கருதுகிறேன். தேசப்பிதாவை மறந்துவிட்டோமா?”என கேள்வி எழுப்பினார்.

கிராமப்புற தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 50 நாள்கள் வேலைவாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு கர்மஸ்ரீ திட்டம் என்ற திட்டம் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்தது மேற்கு வங்க அரசு.

logo
Andhimazhai
www.andhimazhai.com