பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேர்
பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் 11 பேர்

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளின் முன் விடுதலையை ரத்து செய்த உச்சநீதிமன்றம்!

பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் மாநில அரசின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-இல் நடைபெற்ற கலவரத்தின்போது ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு, வன்முறையாளர்களால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். பானுவின் மூன்று வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 போ் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்த பிறகே முதல் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, 2008ஆம் ஆண்டு மும்பையில் உள்ள சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை உறுதி செய்தது.

குற்றவாளிகளின் தண்டனைக் காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அவர்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பொது மன்னிப்பு வழங்கி குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது.

இதை எதிா்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து பல்வேறு பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோா் அமர்வில் அக்டோபர் மாதம் தொடங்கியது.

இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பில், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலைசெய்து குஜராத் அரசு பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்; அவர்களின் மரியாதை முக்கியம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com