என்னா இது... யுபிஎஸ்சியை விட்டுவிட்டு அதிகாரிகளை நியமிப்பதா?
மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற அதிகாரிகள் பணியிடங்களுக்கு உரிய தேர்வுகளைக் கைவிட்டு, நேரடியாக நியமனம் செய்வதில் இறங்குவதா என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
”இந்திய யூனியன் அரசின் முக்கிய நியமனங்களான அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.ஆர்.எஸ். போன்ற பல முக்கிய பதவிகளில் இப்படி இடைச் சொருகல் செய்வது, சட்ட விரோதம் என்பதைத் தாண்டி, அரசியல் சட்டப்படி குடிமக்களின் வேலை வாய்ப்பு உரிமையில் கடைப்பிடிக்க வேண்டிய இடஒதுக்கீடையும், சமூகநீதியையும் அடியோடு புறக்கணிப்பதாகும்!
தங்களுக்கு ‘‘வேண்டியவர்களைக்’’ கொண்டு வந்து இப்படி நியமனம் செய்யும் முறையை – யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் – அரசியல் சட்டம் கூறும் நடைமுறை – அரசின் சட்ட திட்டங்கள் (Rules and Regulations) இவற்றைப் பற்றியெல்லாம் கடைப்பிடிக்காது, தானடித்த மூப்பாக, தன்னிச்சையாக இப்படி நியமனம் செய்வது எவ்வகையிலும் நியாயம் அல்ல!
ஒன்றிய அரசின் அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., போன்ற பெரும் பதவிகளுக்குத் தேர்வும், பயிற்சியும் பெறாதவர்களை, இட ஒதுக்கீடு இன்றி, திடீரென அதிகாரிகளாகக் கொண்டு வந்து அமர்த்தும் இந்த இடைச்செருகல் முறை மூலம் காலங்காலமாக கல்வி - உத்தியோகங்கள் மறுக்கப்பட்ட சமூகங்களான எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி ஆகிய பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, சமூகநீதியைப் பறிக்க முயல்கிறார்கள். 5 ஆயிரம் ஆண்டு சமூக அநீதிக்குப் பரிகாரம் தேடும் இந்த இட ஒதுக்கீட்டைப் பெற்று 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் திடீரென்று மின்னல் தாக்கிக் கண்களைப் பறிப்பதுபோல இட ஒதுக்கீட்டைப் பறிப்பது அநீதியாகும்.” என்று தி. க. தலைவர் வீரமணி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வரும் 24ஆம் தேதியன்று இந்தப் பிரச்னைக்கு நீதி கேட்டு கண்டனப் போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, “ தனியார் துறையில் சிறப்பாகச் செயல்படும் தலைமைச் செயல் அதிகாரிகளை, நேரடியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக நியமிக்கும் திட்டம் என்ற பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 63 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதே திட்டத்தின் கீழ் புதிதாக மேலும் 45 பேரை நியமிக்க ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அண்மையில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.
இந்தத் திட்டம் அப்பட்டமான சட்ட மீறல் மட்டும் அல்ல, அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் கொடும் தாக்குதல் ஆகும். இதன் மூலம் அரசு நிர்வாகம் முழுமையாக ஆர்.எஸ்.ஸ். பிடியின் கீழ் செல்லும் வகையில் பாதை அமைக்கும் சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.
“ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள முக்கிய பதவிகளில் லேட்டரல் என்ட்ரி ஆட்சேர்ப்பு மூலம் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை ஒன்றிய அரசு வெளிப்படையாகப் பறிக்கிறது.” என்று சாடியுள்ளார்.