நடிகைக்குத் துன்புறுத்தல்... சிக்குவார்களா ஐபிஎஸ் அதிகாரிகள்?
மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் தனக்கு தொல்லை கொடுத்ததாக பாலிவுட் நடிகை காதம்பரி ஜெத்வானி புகார் கொடுத்த நிலையில், இது தொடர்பான விசாரணையை ஆந்திர மாநில காவல்துறை தொடங்கியுள்ளது.
புகாருக்குள்ளான மூத்த ஐபிஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிய அம்மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.
இது குறித்து மாநில உள்துறை அமைச்சர் அன்னிதா கூறுகையில், “காதம்பரி ஆன்லைன் மூலம் போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் தப்பிக்க முடியாது.” என்றார்.
நடிகை காதம்பரி கொடுத்த புகாரில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிஎஸ்ஆர் ஆஞ்சநேயுலு, அப்போதை உளவுத்துறைத் தலைவர் காந்தி ராணா, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர் விஷால் குன்னி உட்பட சில கீழ்நிலை அதிகாரிகளும் காதம்பரிக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளனர்.
வழக்கின் பின்னணி என்ன?
அகமதாபாத்தை சொந்த ஊராகக் கொண்ட காதம்பரி முறையாக பரதநாட்டியம் கற்றுக்கொண்டவர். நடிகையாக வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறினாலும் பெரிய நடிகையாக அவரால் உயர முடியவில்லை.
பாலிவுட்டில் சட்டா அட்டா என்ற படத்தில் அறிமுகமான அவர் மலையாளத்தில் ஐ லவ் மீ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். மேலும், தமிழில் செந்தட்டி காளை செவத்த காளை என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. இந்தி , மலையாளம், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, பஞ்சாபி மொழியிலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார் அவர்.
அண்மையில் அவர் அளித்திருந்த பேட்டியில், “கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபருக்கு எதிராக போலீசில் புகார் செய்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது நெருங்கிய நண்பரான ஆந்திர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான குக்கல வித்யாசாகரைத் தொடர்பு கொண்டு எங்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து குக்கல வித்தியா சாகர் காதம்பரி ஜெத்வாணியின் செல்போனுக்கு வீடியோ காலில் ஆபாசமாக நின்று தொல்லை கொடுத்தார். பின்னர் விஜயவாடா போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார்.
அதில், “ போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி மும்பைக்கு வந்தனர். எனது குடும்பத்தினரை சர்வதேச குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளைப் போல விஜயவாடாவிற்கு அழைத்து வந்தனர்.
தடுப்புக் காவலில் வைத்து 3 நாள்கள் சித்ரவதை செய்தனர். எனது பெயரில் உள்ள சொத்து மற்றும் 18 வங்கி கணக்கில் இருந்த ரூ. 80 லட்சம் என ரூ. 6 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறித்துக் கொண்டனர்.
பின்னர் எங்களைச் சிறையில் அடைத்தனர். 48 நாள்களுக்குப் பிறகு நாங்கள் வெளியே வந்தோம்.
கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
தற்போது முதலமைச்சராக உள்ள சந்திரபாபு எங்களுக்கு உதவி செய்து எங்களை காப்பாற்ற வேண்டும்.” என்று காதம்பரி கூறியிருந்தார்.
இந்நிலையில், அம்மாநில அரசு இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.