ஸ்பேம் தொல்லை- 2.7 லட்சம் மொபைல் நம்பர்கள் முடக்கி டிராய் அதிரடி!
தொலைபேசி பல நேரங்களில் தொல்லைபேசியாக இருக்கும்வகையில், விரும்பாத அழைப்புகள் தானாக வருவதுதான்!
என்னதான் தடை போட்டாலும் மீண்டும் மீண்டும் இந்தத் தொல்லை தொடரத்தான் செய்கிறது. இந்த நிலையில், தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம்- டிராய் இதற்கு கடிவாளம் போடும் வகையில் கடந்த மாதம் 13ஆம் தேதி ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
தொலைபேசி நிறுவனங்கள் அங்கீகாரம்பெறாத டெலி மார்க்கட்டிங் நிறுவனங்கள் மீது இதில் கறாராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்த உத்தரவு. ஸ்பேம் எனப்படும் தொல்லை அழைப்புகள் தொடர்பாக 7.9 இலட்சம் புகார்கள் பதிவாகியுள்ளன என்றால், பாதிப்பு எவ்வளவு இருக்கும்!
டிராயின் அதிரடி உத்தரவுப்படி, விதியை மீறும் டெலிமார்க்கட்டிங் தரப்பினரின் தொலைபேசி எண்கள் முடக்கப்படும்; இரண்டு ஆண்டுகள்வரை அவை தடை செய்யப்படும்.
இதன்படி, கடந்த ஆறு மாதங்களில் விதிமீறலில் ஈடுபட்ட 50 நிறுவனங்கள் தடை பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன. 2.75 இலட்சம் தொலைபேசி எண்கள் முடக்கப்பட்டுள்ளன.
டிராயின் செயலாளர் அதுல் குமார் இதைத் தெரிவித்துள்ளார்.