இந்தியர்களின் அமெரிக்கக் கனவை உடைக்கும் ட்ரம்ப்! சம்பளத்தைவிட கூடுதலான H1B விசா கட்டணம்!

விசாக்கட்டணத்தை 100000 டாலர்களாக உயர்த்தும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்
விசாக்கட்டணத்தை 100000 டாலர்களாக உயர்த்தும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார்
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அதிரடிகள் தொடருகின்றன. 

இனி அந்நாட்டில் வேலை செய்வதற்காகச் செல்லும் தொழிலாளர்கள் பெற வேண்டிய  விசாவான ஹெச் 1 பி விசாவுக்கு கட்டணத்தை தற்போதைய ஆயிரம் டாலரில் இருந்து ஒரு லட்சம் டாலர் என உயர்த்தும்  அதிகாரபூர்வ அறிக்கையில் அவர் நேற்று கையெழுத்திட்டார்.

காரணம்?

அமெரிக்க அரசின் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பில் “இந்த ஹெ1 பி விசா முறை மூலம் அமெரிக்க மண்ணில் வேலைக்கு வருகிற தொழிலாளர்களால் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. உண்மையிலேயே மிகத் திறமை வாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேண்டுமானால் இவ்வளவு கட்டணம் செலுத்தி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளலாம்.’’ எனக் கூறப்பட்டுள்ளது.

இனி வேறு வழியில்லாமல் அமெரிக்கர்களையே வேலைக்கு எடுக்கவும், அவர்களுக்கே வாய்ப்பளிக்கவும் தொழில் நிறுவனங்கள் முன்வரும் என அமெரிக்க அரசு நினைக்கிறது.

இனி வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இவ்வளவு கூடுதலான கட்டணத்தை ஆண்டுதோறும் அரசுக்கு செலுத்தவேண்டும். இந்த கட்டணமானது அமெரிக்காவில் ஹெச்1 பி விசாவில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள்  ஓர் ஆண்டுக்குப் பெறும் மொத்த ஊதியத்தைவிட மிக அதிகம் என்பதால் தொழில்துறையினர் ஆடிப்போய் இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு இந்திய ஐடி நிறுவனங்களான டாடா கன்ஸல்டன்சி, காக்னிசண்ட், இன்போசிஸ், மைண்ட் ட்ரீ,  ஹெச் சிஎல் போன்ற நிறுவனங்கள் அமெரிக்காவில் வேலை செய்ய மொத்தம் 13396 பேருக்கு ஹெச்1 விசா வாங்க கட்டணம் செலுத்தி உள்ளன. அதாவது ஊழியர் விசாகட்டணமாக 215 டாலர் கட்டுவார். மீதி 780 டாலரை நிறுவனமே விசா விண்ணப்பிக்க செலுத்தும். இப்போது இந்த கட்டணத்தை ட்ரம்ப் 9900 % என்ற அளவில் உயர்த்திவிட்டார். இந்த உயர்வின் மூலம் இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் பத்து சதவீதம் ஹெச்1பி விசா கட்டணமாகவே செலுத்தவேண்டி இருக்கும் என கணிப்புகள் கூறுகின்றன.

இந்த உத்தரவு அமலுக்கு வந்தால் இனி இந்த விசாவில் ஊழியர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பது குறைந்துவிடும். வேறுவிதமான அணுகுமுறையைத் தான் பின்பற்ற வேண்டி இருக்கும் என தொழில் துறையினர் கூறுகின்றனர்.

அதிக அளவில் வெளிநாட்டவரை வேலைக்கு எடுக்கும் அமேசான், மெடா, டெஸ்லா இனி குறைந்த சம்பள வேலைகளுக்கு வெளிநாட்டவரை எடுக்க மாட்டார்கள். அதிக சம்பளம் பெறும் நிபுணத்துவ வேலைகளுக்கே வெளிநாட்டவரை விரும்புவர்.

இந்த ஆணைக்கு எதிராக வழக்குகள் தொடரப்படும். இதன் முடிவுகள் தெரியும் வரை ஹெச்1 பி விசாக்களுக்கு விண்ணப்பிப்பதை நிறுவனங்கள் குறைத்துக்கொள்ளும் என்றே சொல்லப்படுகிறது.

இந்திய ஐடி துறை ஊழியர்களின் அமெரிக்கக் கனவை ட்ரம்ப் இப்படிப் போட்டு உடைத்துவிட்டாரே?

logo
Andhimazhai
www.andhimazhai.com