யு.ஜி.சி. நெட் தேர்விலும் குளறுபடி... மறுதேர்வு தேதி அறிவிப்பு!

National testing agency
தேசிய தேர்வு முகமை
Published on

நீட்டைத் தொடர்ந்து யு.ஜி.சி. நெட் தேர்விலும் குளறுபடி நேர்ந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இளநிலை ஆய்வாளர்- ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப் வழங்குதல், உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி, முனைவர் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை ஆகியவற்றுக்கு 87 பாடங்களில் யு.ஜி.சி. நெட் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்தத் தேர்வு கடந்த ஜூன் 22 முதல் ஜூன் 30 வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், 84 பாடங்களுக்கான தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

மற்ற 3 பாடங்களில் பிழையாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், அந்தப் பாடங்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

ஆங்கிலம், வணிகவியல், சமூகவியல் ஆகிய மூன்று பாடங்களின் வினாத்தாள்களில் பல்வேறு பிழைகள் இருப்பதாக தேசிய தேர்வு முகமைக்கு ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து, பிழைகளை விசாரித்து ஆய்வு செய்ய தேசிய தேர்வு முகமை குழு ஒன்றை அமைத்தது.

அந்தக் குழு ஆய்வு செய்து, குறிப்பிட்ட மூன்று பாடங்களின் வினாத்தாள்களில் உண்மையான தகவல்களில் பிழை, தட்டச்சுப் பிழைகள், மொழிப்பெயர்ப்புப் பிழைகள் இருப்பதை உறுதி செய்தது.

மேலும், பிரபல அறிஞர்களின் பெயர்களில் தவறு, முக்கிய வாசகங்களில் பிழை, இலக்கணப் பிழைகள், ஏற்கெனவே கேட்கப்பட்ட பல வினாக்கள் மீண்டும் இடம்பெற்றிருப்பது ஆகியவை கண்டறியப்பட்டன.

அதையடுத்து, இந்த மூன்று பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்த முடிவுசெய்யப்பட்டது.

வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஆங்கிலம், வணிகவியல் பாடங்களுக்கும், செப்டம்பர் 10ஆம் தேதி சமூகவியல் பாடத்திற்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com